கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் தீர்மானம்: தலைவர் அண்ணாமலை கண்டனம்!

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல், மத்திய அரசை மட்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முயற்சியால், 2018 ஆம் ஆண்டு, காவிரி நதி நீர் ஆணையம் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்ற பெயரில்  நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. தீர்மானத்தின் மீதான சட்டசபை விவாதத்தில், தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, தமிழக பாஜக சட்டசபை உறுப்பினரான அக்கா திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் பேசியபோது, முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பை தடை செய்வதுமாக, நடந்து கொண்ட செயலில் திமுகவின் ஆண்டாண்டு காலத் தவறுகளும், மக்களுக்கு இழைத்த துரோகங்கள் எல்லாம் வெளிவந்து விடுமோ என்ற பதட்டம் தான் தெரிந்ததே தவிர, விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ, திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழகத்துக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல், வீண் நாடகமாடி காலாகாலமாக மக்களை ஏமாற்றி வருகிறது திமுக.

தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுகவின் துரோக வரலாறு மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top