‘‘சித்தா மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் தொடர்பான மருந்துகளை குறிப்பிட்ட வியாதிகளுக்கு பரிந்துரைக்காலேமே தவிர அந்த மருந்துகள் நோயை குணப்படுத்தும் என விளம்பரம் செய்யக்கூடாது,’’ என இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் யோ.ரா.மானேக்சா தெரிவித்துள்ளார். ஆயுஷ் மருத்துவர்களிடம் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குணமாகும் என்று சொல்லாமல் எப்படி மருத்து வழங்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் உயர்ந்து வரும் சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, அலோபதி மருத்துவத்தை போல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திலும் குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன.
அதே சமயம் அலோபதி மருத்துவத்தை போல ஆயுஷ் மருத்துவத்தில் ஆராய்ச்சி முடிவுகள் செய்யப்படாததால், பல்வேறு நோய்களுக்கு நேரடியாக பரிந்துரைக்க முடியாத சூழ்நிலையே இருக்கிறது.
ஆனால் பாரம்பரிய மருந்துகள் வாயிலாக சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பலர் குணப்படுத்தி வருகின்றனர். அவர்களை அதை தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் விளம்பரமும் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கேரள மாநிலத்தில் வெளியான நாளிதழில் பதஞ்சலி நிறுவனம், ‘அலோபதி தவறாக வழிகாட்டுகிறது’ என்ற தலைப்பில் ஒரு விளம்பரம் வெளியிட்டது.
அந்த விளம்பரத்தில், ‘சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, ஆஸ்துமா, இதயநோய் உள்ளிட்ட தீராத நோய்களை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக குணப்படுத்த முடியும். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் போன்றவையும் தேவையற்றது’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக ஆங்கில மருத்துவர்கள் கழகங்கள் கேள்வி எழுப்பின.
இதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் யோ.ரா.மானேக்சா கூறியதாவது: சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட, 142 நோய்களுக்கு, மருந்துகள் இருந்தால் அவற்றை பரிந்துரை செய்யலாம். ஆனால், ‘குணப்படுத்தும்’ என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்யக்கூடாது. மற்ற மருத்துவ சிகிச்சை முறைகளையும் தாழ்த்தும் வகையிலான விளம்பரமும் செய்யக்கூடாது. அது போன்று செய்யப்படும் விளம்பரங்கள குறித்து புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று கூறியுள்ளார்
இந்திய பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க, அரசே ஆயுஷ் அமைச்சகம் அமைத்திருக்கும் இந்நிலையில் ஆங்கில மருத்துவ அமைப்புகளால் எப்படி இவ்வளவு வலுவாக இயங்க முடிகிறது என்று கேள்விகளை எழுப்புகின்றனர் ஆயுஷ் மருத்துவர்கள்.