ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காட்டில் அதிகளவிலான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஜான் பீட்டர் என்பவர் தனது வீட்டில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தி அங்குள்ள ஹிந்துக்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மிகப்பெரிய ஒலிப்பெருக்கியின் மூலம் ஹிந்து தெய்வங்களை ‘சாத்தான்’ எனக்கூறி இழிவாகவும், அங்குள்ள சென்னிமலை முருகன் கோவிலை இடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பேசியுள்ளார். இதற்கிடையே கடந்த செப்டம்பர் 17ம் தேதி வழக்கம் போல ஜெபக்கூட்டம் நடந்தது.
அப்போது அங்கு சென்ற பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்; ‘அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில், ஜெபக்கூட்டம் நடத்தக் கூடாது’ என வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இந்நிலையில், கிறிஸ்தவ அமைப்பினர், வி.சி.க, ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரின் வற்புறுத்தல் காரணமாக ஜான் பீட்டர் என்பவர் அளித்த புகாரின் பேரில் சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ.க, மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஹிந்துக்கள் வசிக்கின்ற பகுதியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தி, ஹிந்துக்கடவுளை இழிவாக பேசியவரை கைது செய்யாமல் எங்களை மட்டும் எப்படி கைது செய்யலாம் என அங்குள்ள ஹிந்துக்கள் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் எவ்வித பதிலையும் தராமல் சென்றுள்ளனர். ஏற்கனவே திமுக ஆட்சியில் ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மற்ற இரண்டு மதங்களுக்கு மட்டும் சலுகைகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஹிந்துக்களுக்கு எதிரான சம்பவத்தில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது..
இந்நிலையில், வரும் அக்டோபர் 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சென்னிமலை பேருந்து நிலையம் முன் ஹிந்து முன்னணியினர், சென்னிமலை ஆண்டவர் குழு, ஊர்மக்கள் இணைந்து திமுக அரசின் ஒருதலைப்பட்சமான முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சபாநாயகரும், சில கிறிஸ்தவப் பாதிரிகளும் சொல்வது போல, இது சிறுபான்மையினருக்கான ஆட்சி, ஹிந்து மக்களுக்கானதல்ல என்ற எண்ணம் தமிழகமெங்கும் இப்போது வேகமாக பரவி வருகிறது.