தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது. ஆனால் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை என அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் சிபிஎஸ் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ‘சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இணைந்து போராடி வருகின்றனர்.
சிபிஎஸ் ஒழிப்பு என்ற ஒற்றை கோரிக்கை மட்டுமே இவர்களின் இலக்காகும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக இவர்கள் செய்யாத போராட்டமே இல்லை.
இவர்களின் கோரிக்கையை அறிந்த திமுக, தனது தேர்தல் வாக்குறுதியில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னும் அந்த ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது இந்த விடியா அரசு.
இதன் காரணமாக திமுக அரசை எதிர்த்து போராட்டக் களத்தில் தள்ளப்பட்ட அரசு ஊழியர்கள், பல போராட்டங்களை நடத்தினர்.
சமீபத்தில் சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பல பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அதையும் பொருட்படுத்தாமல் தங்களின் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி சுமார் 100க்கு 99 சதவீதம் இதுவரையில் நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறியிருந்தார்.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறி வாக்குகளை வாங்கிவிட்டு, வெற்றியும் பெற்று இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதோடு, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் பேசுவது ஏமாற்றம் அளிப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் 100% வாக்குறுதி நிறைவேற்றி விட்டேன் என்று உண்மைக்கு புறம்பாக கூறும் முதல்வர் அறிவித்ததை கண்டித்து சேலம் நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமையில் நேற்று (அக்டோபர் 9) காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அரசு ஊழியர்கள்.
அதே போன்று மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
ஃபூ என்று ஊதித்தல்ல அரசு ஊழியர்களின் போராட்டம் வலிமையற்றது அல்ல என்பதைச் சொல்லவே காதில் பூச்சூடி நடந்த போராட்டம் என்று வேடிக்கையாகத் தெரிவிக்கின்றனர் இதைப் பார்த்துக் கொண்டே சென்ற மக்கள்..!