மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்கின்ற நோக்கிலேயே மக்கள் தொகை அடிப்படையில் இளநிலை மருத்துவ இடங்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கூறியுள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ இடங்களை அதிகரிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிகளை என்எம்சி வெளியிட்டது.
அதாவது, மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் விவரங்கள் தெரியாமலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், என்.எம்.சி., சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு சொல்வதாவது: நாடு முழுவதும் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதையும் அதன் தரத்தை உயரத்துவதையும் நோக்கமாகக் கொண்டு என்எம்சி இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவர்களின் சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். மருத்துவக் கல்லூரிகளும், இடங்களும் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை கூட அண்மையில் இது தொடர்பாக சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது. அதைக் கருத்தில் கொண்டு 10 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 100 மருத்துவ இடங்கள் என்ற வரம்பை வரையறுத்து அண்மையில் புதிய விதிகள் வகுக்கப்பட்டன. அதனை அடிப்படையாகக் கொண்டாலும் கூட, மேலும் 40 ஆயிரம் புதிய இடங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
இதற்கு மருத்துவத் துறையினர், தனியார் மருத்துவ சங்கத்தினர், மாணவர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டும், வரவேற்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.
தரமான மருத்துவக் கல்வியை உறுதி செய்வதற்காக என்எம்சியின் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.