கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள போதிலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ரூ.910 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 12) சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கோவை மாவட்டம் துடியலூர் வெள்ளைகிணறு பகுதியில் உள்ள மார்ட்டினின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவில் முழு விபரம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.