நவராத்திரி திருவிழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கர்பா பாடல் நேற்று முன்தினம் (அக்டோபர் 14) வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே 5 லட்சம் பேர் இதனை பார்த்தும் கேட்டும் ரசித்துள்ளனர்.
நவராத்திரி விழாவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி எழுதியிருந்த ஒரு பாடலுக்கு இசை அமைக்கப்பட்டு அது வீடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளது. 190 விநாடிகள் ஓடக்கூடிய இந்த பாடல், கர்பா வகைப் பாடல் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல் கடந்த அக்டோபர் 14ம் தேதி டெல்லியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. பாடகி த்வனி பனுஷாலி குரலில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு இசை அமைப்பாளர் தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இப்பாடல் கலாச்சார பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. பிரதமர் மோடியுடன் பணி யாற்றியது குறித்து இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றியது எனக்குப் பெருமை. இந்தப் பாடல் அருமையாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடித்த வகையில் பாடல் அமைந்துள்ளது’’ என்றார்.
இந்தப் பாடல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “இந்தப் பாடல் எனக்கு பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. நான் பல ஆண்டுகளாக எழுதவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும்.
கடந்த சில நாட்களாக ஒரு புதிய கர்பா பாடலை என்னால் எழுத முடிந்தது. அதை வரும் நவராத்திரி திருவிழாவின்போது பகிர்ந்து கொள்கிறேன். பாடகி த்வனி பனுஷாலி, இசையமைப்பாளர் பாக்சி ஆகியோருக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.