காங்கிரஸ் கட்சியால் கொள்ளையடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். ஊழல் செய்து தேர்தலுக்கு நிதியுதவி அளிக்கும் ஏடிஎம் இயந்திரமாக கர்நாடக அரசையும் கட்சியையும் காங்கிரஸ் மாற்றியுள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக தனது சமூக ஊடகங்களில் இன்று (அக்டோபர் 16) அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் தேர்ந்த காங்கிரஸ் கட்சி இப்போது ஒரு படி மேலே போய் போலி உத்திரவாதம் அளிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் சில ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. இது வாக்காளர்களை கேவலப்படுத்தும் கேலிகூத்தாகும். காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏவின் ஊழல் நிறைந்து இருப்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
காங்கிரஸ் கட்சி பணமோசடி, ஊழல் மூலமாக பணம் சம்பாதித்து, வரவிருக்கும் தேர்தலுக்கான ஏடிஎம் இயந்திரமாக கர்நாடகாவை மாற்றி வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடிந்த ஓர் உத்தரவாதம் ஊழலுக்கான உத்தரவாதம் மட்டுமே. காங்கிரஸும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ராஜஸ்தானையும், சத்தீஸ்கரையும் ஊழலின் ஏடிஎம்-மாக மாற்றியுள்ள காங்கிரஸ் அரசு இப்போது தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகியவைகளையும் அதே போல மாற்றி ஏழை மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்க நினைக்கின்றது. அதனாலேயே அந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ கட்சி ஆட்சிக்கு வரத்துடிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.