காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் எனவும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது இஸ்ரேல் நிர்வாகம்.
பாலஸ்தீன நாட்டில் தன்னாட்சி பெற்ற நகரமாக காஸா உள்ளது. ஹமாஸ் என்ற மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு அந் நகரத்தை நிர்வகித்து வருகிறது. மேலும் அங்கு பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளும் காஸாவில் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு இஸ்ரேல் மீது அவ்வப்போது ராக்கெட் மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினர். இதற்கு பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் உட்பட இதர அமைப்புகளும் உதவி செய்தன, செய்து வருகின்றன.
ஹமாஸ் நடத்திய கோரத் தாக்குதலில் இஸ்ரேல் பொதுமக்கள், ராணுவத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1000க்கும் அதிகமானோர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் காஸாவிற்குள் பிடித்து சென்றனர்.
இதன் பின்னர் இஸ்ரேல் அரசு காஸா மீது போர் தொடுப்பதாக அறிவித்து அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி காஸாவில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் மும்முனை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ஹமாஸ் பயங்கரவாதிகளின் இலக்குகளை குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் முகாம்கள் இருப்பதால் இஸ்ரேலின் வான் வழித் தாக்குதலில் ஒருசில பொதுமக்களும் உயிரிழக்க நேரிடுகிறது. இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் இருக்கு அனைவரும் வேறு பகுதிக்கு வெளியேறவும் இஸ்ரேல் ராணுவம் சார்பாக நேரம் கொடுக்கப்பட்டது. ராணுவத்தின் உத்தரவுப்படி பல லட்சம் மக்கள் காஸாவில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
நேற்று (அக்டோபர் 18) 12-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இத்தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தான் நடத்தியதாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால், இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறது. ஆனால் வேண்டும் என்றே ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது பழிசுமத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று கூறியிருக்கும் இஸ்ரேல், அதற்கான ஆதாரமாக பல வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மருத்துவமனைகள் மிகவும் உணர்வு பூர்வமானவை. இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் இலக்காக அவை ஒருபோதும் இருந்ததே இல்லை. இத்தாக்குதல் எங்கிருந்து நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இச்சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய, துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். பயங்கரவாத அமைப்பு ஒரு தகவலைப் பகிரும் போது அதை எச்சரிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, இஸ்ரேல் பிரதமரின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகெவ் கூறுகையில், “இஸ்ரேல் இராணுவத்தின் டார்கெட்டாக ஒரு போதும் மருத்துவமனைகள் இருந்ததே இல்லை. தற்போது வரை கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அது ஹமாஸ் அனுப்பிய ஏவுகணையைப் போலவே இருக்கிறது.
ஹமாஸ் அனுப்பும் ஏவுகணைகளில் சராசரியாக 33 சதவீத ராக்கெட்டுகள் காஸா பகுதியிலேயே விழுந்து விடுவதை கடந்த காலங்களிலேயே நாம் பார்த்திருக்கிறோம். அப்படியொரு சம்பவம்தான் காஸா மருத்துவமனை தாக்குதலிலும் நடந்திருக்கலாம். காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடந்த அதே நேரத்தில்தான் மத்திய இஸ்ரேலைக் குறிவைத்து ஹமாஸ் ஏவுகணையை வீசி இருந்தது.
அப்போது, டெல் அவிவில் சைரன் அலர்ட் கூட வந்தது. ஹமாஸ் படைதான் எங்களை நோக்கி ஏவுகணையை அனுப்பியது. ஆனால் அந்த ஏவுகணை இஸ்ரேலை தாக்கவில்லை. அப்படியானால் அந்த ஏவுகணை எங்கே போனது? எதைத் தாக்கியது என்பதே எங்களது கேள்வி. இஸ்ரேல் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்கிற கருத்தை உலகெங்கும் பரப்ப ஹமாஸ் விரும்புகிறது. எனவே, இத்தகவலை நாம் எச்சரிக்கையுடன்தான் அணுக வேண்டும்” என்றார்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “காஸாவின் அல் அஹில் மருத்துவமனையைத் தாக்கிய ஏவுகணை குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய ஜிஹாத் (ஹமாஸ்) அமைப்புதான் பொறுப்பு. எங்களிடம் ஆதாரம் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
வேண்டும் என்றே உலக நாடுகளை நம்ப வைக்க ஹமாஸ் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி, பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதற்கான பழியை இஸ்ரேல் மீது போட்டுவிட்டால் உலக நாடுகள் காஸா பக்கம் திரும்பும் என ஹமாஸ் பயங்கரவாதிகள் திட்டம் போட்டுள்ளனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பயங்கரவாதிகள் எப்போதுமே பொதுமக்களுக்கு ஆபத்தானவர்கள் என்பதை ஹமாஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்குதான் இந்தியாவில் சில கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. இந்தியர்கள் நாமும் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.