2025ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு பாரதம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007ல், 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டது. கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு ககன்யான் என, பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பூமியிலிருந்து 400 கி.மீ., தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்கு பின் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
அக்டோபர் 21ம் தேதி காலை, 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானத்தை ஏவ ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது. ககன்யான் திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2025ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். ககன்யான் திட்டத்துக்கு முன்னோடியாக 20 வகையான முக்கிய பரிசோதனைகள் நடத்தப்படும். 3 முறை ஆளில்லாமல் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025ல் இந்தியா தனக்கான பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட வேண்டும்.
2040ம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலவுக்கு இந்திய வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த விண்கலம் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.