குழந்தை பருவம் முதலே ஆன்மிக நீரோடையில் நீந்திய பங்காரு அடிகளார்: ஆர்எஸ்எஸ் புகழாரம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு 

ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் முனைவர் இரா.வன்னியராஜன் ஆர்எஸ்எஸ் சார்பில் 

இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தமிழ்நாடு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அஞ்சலி..

தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மிக அன்பர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைப் பருவம் முதலாகவே ஆன்மிக நீரோடையில் நீந்திய அடிகளார், தனது கடும் முயற்சிக்குப் பிறகு அன்னை ஆதிபராசக்திக்கு பீடம் ஏற்படுத்தி அப்போது முதல் முழுநேரமாக ஆன்மிக சேவையை,  உலகெங்கிலும் அன்னை ஆதிபராசக்தியின் மகிமைகளைக் கொண்டு சேர்த்து வந்தார். உலகெங்கிலும் இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கு ஆன்மிக குருவாகவும், அன்பைப் பொழியும் அன்னையாகவும் திகழ்ந்தார்.

கோடிக்கனக்கான மக்களின் ஆன்மிகத் தேடலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். பாமரரின் இதயத்தில் அன்னையின் வடிவான சநாதன தர்மத்தைக் கொண்டு சேர்த்ததோடு, அவர்களின்பால் அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட அரும் பாடுபட்டார்.

ஏழை, எளிய மக்களுக்காக கல்வி நிலையம் துவங்கி கல்விக் கண் திறந்தார். மருத்துவம் பார்க்க இயலாதவர்களுக்கு மருத்துவமனை துவங்கி பெருஞ்சேவை புரிந்தார்.

ஆன்மிகப் புரட்சியாக, பெண்கள் கருவறைக்குள் செல்ல இயலாது என்ற கூற்றை பொய்யாக்கியதோடு, பெண்களையே அம்மனுக்கு பூஜை செய்ய வைத்து சாதனை நிகழ்த்தினார். இப்படி எண்ணிலடங்கா சேவையாற்றிய பெரியவர் அடிகளாரின் மறைவு, ஆன்மிக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் சேவையை கௌரவித்து மத்திய அரசாங்கம் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அடிகளார் செய்த ஆன்மிக மருத்துவ, கல்விச் சேவை என்றும் அவர் புகழ்பாடும். அடிகளாரை இழந்த அன்னையின் பக்தர்களுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top