மனிதாபிமான அடிப்படையில் உதவி: பாலஸ்தீன அரசுக்கு பிரதமர் மோடி உறுதி!

காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்து கடந்த இரண்டு வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 18ல்  தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மறுத்துள்ளார். இதனை காஸாவில் உள்ள பயங்கரவாத அமைப்புதான் செய்தது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருப்பதோடு, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸுடன் பேசினேன். காஸா அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். மேலும், பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புகிறோம் என்று உறுதியளித்தேன்.

இது தவிர, காஸா எல்லையில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையையும் பகிர்ந்து கொண்டேன்.

அதேபோல, இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top