விராலிமலையில் ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் பிரதான சாலைகளில் ஏராளமான கடைகள் உள்ளன. ஆயுத பூஜையையொட்டி பல்வேறு கடைகள் விடுமுறை அளித்திருந்தன. பல்வேறு கடை உரிமையாளர்கள் கடந்த அக்டோபர் 22ம் தேதி கடைகளில் பூஜை நடத்திவிட்டு, கடையை பூட்டிச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி தகவல் கிடைத்த கடை உரிமையாளர்கள் சிலர் கடை உள்ளே பார்த்த போது அங்கிருந்த மடிக்கணினி, மின்னனு சாதனங்கள் போன்ற பல பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து கடைகளிலும், கோவில்களிலும் திருடு நடைபெற்று வருகிறது. ஆனாலும் காவல்துறை இரவு நேர ரோந்துப் பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என்ற அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இனியாவது பொதுமக்களின் உடமைகளைக் பாதுகாக்க இந்த அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.