சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக நேற்று (அக்டோபர் 25) பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது விடியாத திமுக அரசின் அலட்சியமா அல்லது தூண்டுதலாக என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆளுநருக்கே இது தான் கதியா என்ற கேள்வி தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது!
இது தொடர்பாக, சென்னை காவல் துறை ஆணையரிடம் ஆளுநர் மாளிகை சார்பில் ஆளுநரின் துணைச் செயலாளர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று (அக்டோபர் 25) அன்று மதியம் 2.45 மணி அளவில் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருந்தாலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விழிப்புடன் செயல்பட்ட காரணத்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த தாக்குதலை மேற்கொண்டவர் காவலர்கள் வசம் சிக்கினார்.
கடந்த சில மாதங்களாக ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலும் இதில் ஈடுபட்டது திமுகவை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் வாய்மொழி தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் செய்து வருகின்றனர்.
கடந்த 2022-ல் தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தோம். ஆனால், இன்று வரை எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. இப்படியாக ஆளுநர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்ட புகார் மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆளுநரை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தொடர்பான புகார்கள் மீது காவல் துறை அலட்சியம் காட்டியது. அது ஆளுநர் மற்றும் ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பை குலைத்தது. அதன் விளைவுதான் தற்போது ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்டுள்ள பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல். வாய்மொழித் தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் கடந்து தற்போது பெட்ரோல் வெடிகுண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் ஆளுநர் பணியாற்ற முடியாது. அதனால் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணையை மேற்கொண்டு, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதே நேரத்தில் ஆளுநருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.