பயங்கரவாத சக்திகளை ஒடுக்க கோவையில் அமைகிறது என்.ஐ.ஏ., கிளை அலுவலகம்!

பயங்கரவாத சக்திகளை ஒடுப்பதற்காக கோவையில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் துவங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி சட்ட விரோத செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவில் அவர்கள்  தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது.

சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநில உளவுப்பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு நமது நாட்டில் தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக, ஏற்கனவே ஜிகாதி அமைப்புகளால்  மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு பயிற்சி வழங்கி வந்தது தெரிய வந்தது.

மேலும் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து கள்ளத்தோணி வாயிலாக தமிழகத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.  கேரளாவிலும் கேரளாவிலும் அது போன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது. 

இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பயங்கரவாதிகள் தென் மாநிலங்களை குறி வைத்து செயல்படுவதால் என்.ஐ.ஏ., அமைப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் செயல்படுகிறது. இதையடுத்து கோவையிலும் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத சக்திகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன.

இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் ஒரு என்.ஐ.ஏ., அலுவலகம் துவங்க வேண்டியது கட்டாயம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளி வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top