இந்திய அரசின் உதவியுடன் இலங்கை மலையகத் தமிழர்களுக்கு 10,000 வீடுகள்:  அடிக்கல் நாட்டினார் நிர்மலா சீதாராமன்!

இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சார்பாக கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினர்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதிக்கப்பட்டு வீடு இன்றி தவித்து வந்தனர். அதன்படி இந்திய அரசு உதவியுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டன. மேலும், தேயிலைத் தோட்டத் தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளில் 3,700 வீடுகள் கட்டித் தரப்பட்டன.

இலங்கையில் கடந்த 2017-ல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அப்போது, “மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு, இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசுத் தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டத்துடன், கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த நிலையில், மலையக மக்கள் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ‘நாம் 200’ என்ற தலைப்பிலான மாநாடு கொழும்புவில் நேற்று முன்தினம் (நவம்பர் 2) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கொட்டக்கலை பகுதியில் அமைந்துள்ள மவுன்ட் வெர்மன் தேயிலைத் தோட்டத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும், இணைந்து காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினர். இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “இந்த அடிக்கல் நாட்டுவிழா, இரு நாட்டு உறவில் சிறப்பான தருணம். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா ரூ.33,000 கோடி வழங்கியது” என்றார்.

முன்னதாக, கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு நடந்தது. இதில், இந்தியா-இலங்கை இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலான பெளத்த  தொடர்புகளை பலப்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி இந்தியா சார்பாக வழங்கப்பட்டது.

தனது விஜயத்தின் போது திரிகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை தொடங்கி வைத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்கோணஸ்வரம் சிவன்கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top