கரூர் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 3) முதல் என் மண் என் மக்கள் பயணம் தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசு செய்த 9 ஆண்டுகால சாதனைகள் எடுத்துரைத்தார். அப்போது மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பயனடைந்திருப்பதை கண்டு பெருமிதம் அடைந்தார்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பயணம் தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றைய என் மண் என் மக்கள் பயணம், நொய்யல் மற்றும் அமராவதி நதிக்கரையில், குடகு முதல் பூம்புகார் 765 கிலோமீட்டர் நீளமுள்ள காவிரி நதி, 1.5 கிலோமீட்டர் அகலமாக, அகண்ட காவிரியாக, காகம் தாண்டா காவிரியாகப் பாயும் எழில் மிகு நகரமான, சம்பந்தராலும் அருணகிரிநாதராலும் பாடப்பட்ட சுயம்பு மூர்த்தியான பசுபதீஸ்வரர் அருள்பாலிக்கும் கரூர் மண்ணில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் ஆரவாரத்துடன் வெகு சிறப்பாக நடந்தேறியது.
சங்க காலத்தில் வஞ்சி நகர் என்ற பெயரில், சேரமன்னர்களின் தலைநகராக விளங்கிய நகரம். 18 சித்தர்களின் ஒருவரான கருவூரார் வாழ்ந்த மண் என்பதால் அவர் பெயரில் கரூர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கங்கை முதல் குமரி வரையிலான தட்சிணபாத பெருவழி மற்றும் மேற்கு கடற்பகுதியில் இருந்து பாலக்காட்டு கணவாய் வழியாக பூம்புகாரை இணைக்கும் கொங்கப் பெருவழி இரண்டு பெருவழிகளும் சந்திக்கும் மிகமுக்கியமான பெருநகரமாகும். இங்கு நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ரோம் நாட்டு நாணயங்கள், பண்டைய காலத்திலே அயல் நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்ட தொன்மையான நகரம் கரூர் என்பதைக் காட்டுகிறது.
இன்றும் கூட கரூரில் ஜவுளி வணிகம் ஆண்டுக்கு 3000 கோடி அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது. பேருந்துகள் பாடி கட்டும் தொழிலில் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வர்த்தகம் கரூரில் மட்டும் நடைபெறுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் கொசுவலைகளில் 60%, கரூரில்தான் தயாரிக்கப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2000 கொசுவலைகள் பின்னும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளின் மூலமாக நேரடியாக 20,000 பேருக்கும் மறைமுகமாக 15,000 பேருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கிறது.
இந்த ஆண்டு மே மாதம், ஜப்பானில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட நமது பாரதப் பிரதமர் அணிந்திருந்த மேலாடை, கரூர் மண்ணில் உள்ள ஒரு நிறுவனம் பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையில் தயாரித்தது என்பது நமக்கெல்லாம் பெருமை. தமிழகத்தில் தயாரிக்கப்படும் பொருள்களை உலகெல்லாம் கொண்டு செல்கிறார் பாரதப் பிரதமர்.
கரூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் வீடு திட்டம் மூலமாக 12,528 பேருக்கு வீடு, 1,52,169 வீடுகளில் குழாயில் குடிநீர், 96,650 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 48,157 பேருக்கு, ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 81,879 பேருக்கு பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, 72,913 விவசாயிகளுக்கு, வருடம் 6000 ரூபாய் நிதி, 1270 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி இவை வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 2021ஆம் ஆண்டு கரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களான செங்குளம் பள்ளி மாணவர் சின்னத்துரை, தோகைமலை பள்ளி மாணவர் சிவகணேசன், கடவூர் பள்ளி மாணவி ஆர்த்தி, சின்னதாராபுரம் பள்ளி மாணவி அகல்திகா, குளித்தலை பள்ளி மாணவி நர்மதா ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு முதலிடத்தை பிடித்த கரூர் மாணவர் பிரபு வெகுவிரைவில் மருத்துவராகவுள்ளார்.
ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்கப்போறேன் என்று கிளம்பியிருக்கிறார் உதயநிதி. மக்கள் ஆதரவு இல்லாததால், அவரால் 14 நாட்களில் 3 லட்சம் கையெழுத்து கூடப் பெறமுடியவில்லை. திமுகவினரே கையெழுத்து இடவில்லை. உதயநிதிக்கு நீட் தேர்வு தேர்ச்சி பெறுவது பற்றி சந்தேங்கங்கள் இருந்தால் எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, பள்ளி மாணவர்களிடம் சென்று தற்கொலை பற்றி பேசுவது, பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கையெழுத்து இடச்சொல்வது போன்ற கீழ்த்தரமான அரசியலை உதயநிதி கைவிடவேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத உதயநிதி, தமிழக மாணவர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம்.
திமுக 2021 தேர்தலில், கரூர் மாவட்டத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளான, வாக்குறுதி எண் : 448 -கரூரில் விமான நிலையம், எண் : 81 – கரூரில் பேரீச்சை மரங்களை வளர்ப்பதற்கும், பேரீச்சை சார்ந்த தொழில்களை உருவாக்கவும் சிறப்பு திட்டம் மற்றும் சிறப்பு நிதி உதவி, எண் : 83 – காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டம், எண்: 215 – கழிவுநீர் அகற்றும் பொதுவான சுத்திகரிப்பு வசதி இவை ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் செந்தில் பாலாஜி, 2019 ஆம் ஆண்டு, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம், இலவச வீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். கரூர் கம்பெனி என்ற ஒரு மாஃபியா நிறுவனத்தை நடத்தி, கரூருக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்தவர் ஊழல் பாலாஜி. இன்று ஊழல் செய்த வழக்கில் புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அவர், 11 மணிக்கு ஆட்சிக்கு வந்ததும் 11:05 க்கு மணல் அள்ளலாம். தடுக்கும் அதிகாரி இருக்க மாட்டார் என்று பேசியதன் விளைவு, இன்றும் மணல் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகள் மீதும் சமூக அக்கறைக் கொண்ட பொதுமக்களின் மீதும், தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. இதனைத் தடுக்கக் கையாலாகாமல் இருக்கிறது ஊழல் திமுக அரசு.
இந்தத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள், நான்கரை ஆண்டுகளாக தொகுதிக்கே வராமல், சீசனுக்கு வரும் வேடந்தாங்கல் பறவை போல, இப்போது தேர்தல் நெருங்குவதால் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறார். காவிரி நீர் திறக்க மறுத்த கர்நாடக அரசுக்கு எதிராகவோ, மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விவசாயிகள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், தேர்தல் நெருங்கி விட்டதால் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்.
கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை முன் நின்று அரங்கேற்றியது கரூர் மேயர் கவிதா தான். ஆனால் இந்த வழக்கில் அவர் மீது காவல்துறை எந்த வழக்கும் பதியவில்லை. மேயராக இவர் செய்த சாதனைகள், மாநகராட்சி அலுவலகத்துக்கு 25 லட்ச ரூபாய்க்கு பேனா, பென்சில், பேப்பர் போன்ற எழுதுபொருட்கள் வாங்கியது, திருமாநிலையூர் பகுதியில் சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறாமல் பேருந்து நிலையம் கட்ட தொடங்கியதால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கரூர் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இவை மட்டும் தான்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் மிகுந்த மக்கள் விரோத திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.