மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் காங்கிரஸை விட பாஜக முன்னிலையில் உள்ளது என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 17ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் முதலமைச்சர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தற்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் தலைமையில் தான் தேர்தலை எதிர்கொள்கிறது. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முன்னிறுத்தப்படுகிறார். வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில் என்.டி.டிவி, சிஎஸ்.டிஎஸ் லோக்நிதி ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.
கருத்துக் கணிப்பின்போது மாநிலத்தில் 230 தொகுதிகளிலும் கடந்த அக்டோபர் 24 முதல் 30ம் தேதி வரை பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. பாஜக முதல்வர் சிவராஜ் சிங்கின் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 27 சதவீதம் பேர் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர். 34 சதவீதம் பேர் ஓரளவு திருப்திகரமாக இருப்பதாக கூறினர். சுமார் 16 சதவீதம் பேர் பகுதியளவு அதிருப்தியும், 18 சதவீதம் பேர் முழு அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். 5 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் கூறவில்லை.
சாலை வசதி மேம்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு 54 சதவீதம் பேர் ஆதரவும், 24 சதவீதம் பேர் அதிருப்தியும் தெரிவித்தனர். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது என்று 36 சதவீதம் பேரும், சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். கமல்நாத்துக்கு 34 சதவீதம் பேரும், பாஜக மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 4 சதவீதம் பேர், நரேந்திர சிங் தோமருக்கு 2 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். இதில் 65 சதவீதம் பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்தனர்.
நகரங்களில் பாஜகவுக்கு 55 சதவீதம், காங்கிரஸ் கட்சிக்கு 35 சதவீதம் பேர் ஆதரவு உள்ளது. கிராமங்களில் பாஜகவுக்கு 39 சதவீதம், காங்கிரஸ்க்கு 44 சதவீதம் ஆதரவு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 65 சதவீதம் பேர் முழு திருப்தி தெரிவித்தனர். 29 சதவீதம் பேர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது என என்.டி.டிவி கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.