இந்திய செஸ் வீராங்கனை வைஷாலிக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடர் பிரிட்டனில் நடைபெற்றது. மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதி சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை, வைஷாலி எதிர்கொண்டார். இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றதால் சாம்பியன் பட்டத்தை வைஷாலி கைப்பற்றினார்.
மேலும் சுமார் 20 லட்சம் ரூபாயையும் அவர் பரிசுத் தொகையாக வென்றார். இந்த வெற்றியின் மூலம் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் CANDIDATE தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார்.
ஏற்கெனவே ஆண்கள் பிரிவில் உலக கோப்பையில் வெள்ளிபதக்கம் வென்றது மூலம் அவரது சகோதரர் பிரக்ஞானந்தா CANDIDATE தொடருக்கு தேர்வாகிய நிலையில் தற்போது அக்கா வைஷாலி மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வைஷாலி நெருங்கி வருகிறார்.
இந்த நிலையில், வைஷாலிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை செல்வி. வைஷாலி அவர்களுக்கு @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட் செஸ் தொடரில், விளையாடத் தகுதி பெற்றுள்ள உலகின் முதல் சகோதர சகோதரி இணை என்ற பெருமையும் படைத்துள்ள வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா இருவரும், உலக அரங்கில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம் நாட்டையும், நம் அனைவரையும் பெருமைப்படுத்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.