பகவான் பிர்சா முண்டா பிறந்த தினமான இன்று ரூ.24,000 கோடி மதிப்பிலான பழங்குடிகள் வளர்ச்சித் திட்டத்தைப் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15வது தவணை தொகையான ரூ.18,000 கோடியையும் இதன் மூலம் 8 கோடி விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 14, 15 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்கிறார். அதன்படி இன்று (நவம்பர் 15) காலை 9.30 மணியளவில் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்குச் சென்ற அவர் பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்கு வருகை தரும் முதல் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். குந்தியில் காலை 11:30 மணியளவில் மூன்றாவது பழங்குடியினர் கௌரவ தினம், 2023 கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை’ மற்றும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கான இயக்கம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.
சுகாதார வசதிகள், அத்தியாவசிய நிதி சேவைகள், மின்சார இணைப்புகள், சமையல் எரிவாயு இணைப்புகள், ஏழைகளுக்கான வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு, சரியான ஊட்டச்சத்து, நம்பகமான சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்ற நலத்திட்டங்களின் நன்மைகளை மக்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த யாத்திரை கவனம் செலுத்தும். யாத்திரையின் போது உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் மூலம் சாத்தியமான பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை’யை தொடங்கி வைப்பதைக் குறிக்கும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு வேன்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் கணிசமான பழங்குடி மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் இருந்து தொடங்கும் இந்த யாத்திரை 2024 ஜனவரி 25 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி யாத்திரை மேற்கொள்ளும்.
‘குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கான (பி.எம்.பி.வி.டி.ஜி) பிரதமரின் இயக்கம்’ என்ற முதல் முயற்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட 22,544 கிராமங்களில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் வாழ்கின்றன.
இந்த பழங்குடியின மக்கள் ஆங்காங்கே, தொலைதூர மற்றும் எளிதில் அணுக முடியாத குடியிருப்புகளில், பெரும்பாலும் வனப் பகுதிகளில் வசிக்கின்றனர், எனவே சுமார் 24,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் குடும்பங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், மேம்பட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
9 அமைச்சகங்களின் 11 நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். உதாரணமாக, பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்றவற்றின் கீழ் இந்த தொலைதூர குடியிருப்புகளை உள்ளடக்கும் வகையில் சில திட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும்.
கூடுதலாக, பிரதமரின் மக்கள் ஆரோக்கியா திட்டம், ஹீமோகுளோபின் அசாதாரணமான வகையில் காணப்படும் சிக்கில் செல் நோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, 100% நோய்த்தடுப்பு, பிரதமர் சுரக்ஷித் மாத்ரித்வா யோஜனா, பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா, பிரதமரின் போஷன், பிரதமர் மக்கள் வங்கித் திட்டம் போன்றவற்றை முழுமையாக நிறைவேற்றுவது இத்திட்டத்தின் வாயிலாக உறுதி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு 15வது தவணை தொகை:
பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித்தொகை (பி.எம்-கிசான்) கீழ் சுமார் ரூ.18,000 கோடியின் 15வது தவணைத் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம் 8 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், இதுவரை 14 தவணைகளில் 2.62 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குந்தி மாவட்டத்தில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இன்றைய நாள் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகும். பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பழங்குடியினரின் பெருமை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியவை நாட்டின் 4 தூண்கள். இந்த நான்கு தூண்களும் வளர்ச்சி அடையும் போது நாடு வளர்ச்சி அடையும். இன்று நாம் ஜார்கண்ட் நிறுவன தினத்தை கொண்டாடுகிறோம். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முயற்சியால் தான் நடந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிசாக கிடைத்துள்ளது. விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 13,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் கோடி வரை கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.