கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கப்பட்ட அரியலூர் ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் ஆலய நடராஜர் சிலையை, 2014 நவம்பர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் நான்காம் கட்ட யாத்திரை நேற்று (நவம்பர் 15) அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் சட்டப்பேரவை தொகுதியில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையை எடுத்துக் கூறி வருகிறார்.
அதன்படி நேற்று நடைபெற்ற யாத்திரை பயணம் தொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்றைய (நவம்பர் 15) என் மண் என் மக்கள் பயணம் தெற்காசியாவையே கட்டியாண்ட ராஜேந்திர சோழர் உருவாக்கிய, கங்கை, கடாரம் என பெருவெற்றிகளின் அடையாளமாக இருந்த கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ள, ஜெயங்கொண்டம் தொகுதியில் பெரும் மக்கள் திரள் சூழ சிறப்பாக நடந்தேறியது. 1000 வருடங்கள் பழமையான கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயில் அமைந்திருக்கும் பகுதி இது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழரால் அமைக்கப்பட்ட, 2 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 824 ஏக்கர் பரப்பளவு மற்றும் 18 அடி ஆழம் கொண்ட சோழகங்கம் என்ற பொன்னேரி அமைந்துள்ள பகுதி.
ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் ராசு ஆகிய இருவரும் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டது பெருமைக்குரியது.
1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்கம் இணைந்து ஒரு 1600 மெகாவாட் அனல்மின் நிலையத்தை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். 1997 ஆம் ஆண்டு, இந்தத் திட்டத்திற்காக, ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார 13 கிராமங்களில் இருந்து 8373 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் (டிட்கோ) நிறுவனம் கையகப்படுத்தியது. அவர்களுக்கான இழப்பீடு கடந்த 25 ஆண்டுகளாகக் கொடுக்கவில்லை. நிலப் பட்டாக்களை பெற்றுக்கொண்டு, இழப்பீடும் கொடுக்காமல் 25 ஆண்டுகள் விவசாயப் பெருமக்களைக் காத்திருக்க செய்து விட்டு, தற்போது மீண்டும் பட்டாவை திருப்பிக் கொடுத்த திமுக அரசுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையை பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது. நிலம் கொடுத்த சில விவசாயிகள், 25 வருடங்கள் காத்திருக்க வைத்தமைக்கு இழப்பீடு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு திமுக அரசு எப்போது தீர்வு வழங்கும்?
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று அரியலூருக்கு வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில், 26,571 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,59,129 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,44,699 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 61,042 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 89,965 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,11,694 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 1512 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல லட்சம் மக்கள் பயனடையும்படி நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளது.
ஆனால் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, ஜெயங்கொண்டம் முந்திரி ஆராய்ச்சி நிலையம், உடையார்பாளையத்தில் முந்திரிப்பருப்பு தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காகிதத் தொழிற்சாலை, ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீர் வசதி என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், 510 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.
என் மண் என் மக்கள் பயணம், சைவ வைணவ ஒற்றுமைக்கு சான்றாக, கோதண்டராமரும், வைத்தியநாத ஈஸ்வரனும் குடிகொண்டு இருக்கும், அரியலூர் மண்ணில், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ ஆரவாரத்துடன் நடந்தேறியது.
அரியலூரில் மட்டும் நெல், கரும்பு மக்காச்சோளம் என ஒரு லட்சம் ஹெக்டேருக்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயர் பெற்ற அரியலூர் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலமாக ஒரு நாளுக்கு ஒரு லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதால், சிமெண்ட் சிட்டி என அழைக்கப்படுகிறது. ஆனாலும், தமிழகத்தின் மிகவும் பிற்படுத்தபட்ட பகுதிகளில் அரியலூரும் ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசு 2017ஆம் ஆண்டு வெளியிட்ட மாவட்டவாரியான மனித வளர்ச்சி குறியீட்டில், கடைசி இடத்தில் இருப்பது அரியலூர் மாவட்டம்.
பாரதத்தில் இருந்து கடத்தப்பட்ட கடவுள் சிலைகளில், 1976 முதல் 2013 வரை, 13 சிலைகள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. ஆனால் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனபிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கப்பட்ட அரியலூர் ஸ்ரீ புரந்தான் பிரகதீஸ்வரர் ஆலய நடராஜர் சிலையை, 2014 நவம்பர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துறையில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல் மட்டும் 2000 கோடி ரூபாய். தமிழகம் முழுவதும் உள்ள அமைச்சரது ஆட்கள் மூலமாக கமிஷன் வசூலித்து, கோபாலபுரத்துக்கு கப்பம் கட்டி வருகிறார். பதிலுக்கு, அவர் மனைவி நடத்தி வரும், கருத்தரிப்பு மையத்தின் விளம்பரப் பலகைகளை, அரசுப் பேருந்துகளில் வைத்துக் கொள்கிறார்.
செந்தில் பாலாஜி Cash for Job Scam அமைச்சர் என்றால், சிவசங்கர், cash for transfer அமைச்சர். வாகன ஆய்வாளர் பதவிகளுக்காக 30 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கான டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது புகார் உள்ளது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், அரியலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பிரதமரின் வீடு திட்டம், குழாய் குடிநீர், முத்ரா கடன் உதவி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கான நிதி, பிரதமரின் மருத்துவக் காப்பீடு என பல லட்சம் மக்கள் பலனடைந்துள்ளார்கள்.
தமிழகத்தில் மது விற்பனைத் துறை தான் இயங்கி வருகிறது. தீபாவளியை ஒட்டிய இரண்டு நாட்களில் மட்டும், தமிழகத்தில் மது காரணமாக ஏற்பட்ட விபத்து மற்றும் கொலை மூலம் மட்டும் 20 உயிரிழப்புகள். அதைப் பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. பாக்கெட் மது விற்று விற்பனையை எப்படி பெருக்கலாம் என்று மட்டுமே சிந்தித்து வருகிறார்கள்.
திமுக கூட்டணி கட்சியான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்தி, காவிரி நீரை குறித்த நேரத்தில், குறித்த அளவில் பெற்றுத் தராமல் திமுக வஞ்சித்ததன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 3.3 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மட்டுமல்ல, சாதாரண ஏழை எளிய பொதுமக்களுக்கும் ரேஷன் அரிசி தட்டுப்பாடு வரக் காரணமாக அமைந்துள்ளது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாமர மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவோம். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.