தமிழகத்தில் நீதிமன்ற அனுமதியுடன் 55 இடங்களில் மிக பிரமாண்டமான முறையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவதற்கு விடியாத திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று நேற்று (நவம்பர் 19) 55 இடங்களில் மிக பிரமாண்டமான முறையில் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பல்வேறு இடங்களில் அணிவகுப்பில் பங்கேற்றவர்களுக்கு பொதுமக்கள் பூக்கள் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு விஜயதசமி நாளிலும் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நடத்த அனுமதி கோரியிருந்தது. ஆனால் விடியாத அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், மாநில காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. இதன் காரணமாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது ஆர் எஸ் எஸ். இறுதியில் நீதி வென்றது.
உச்சநீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது. தமிழக அரசு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்க அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. சென்னையில் குரோம்பேட்டை, கொரட்டூர் மற்றும் மணலி ஆகிய 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, உடன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் கூனாலுமூடு, கோவை மாவட்டம் துடியலூர், கோட்டூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், திருப்பூர் உடுமலை, நீலகிரி கோத்தகிரி, சேலம் மரவனேரி உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலம் நடத்தப்பட்டது. தமிழகமெங்கும் நடைபெற்ற ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேசப்பக்தியை வெளிப்படுத்தினர்.
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்க முயன்ற பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் இப்ராஹிமை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் வெளியே செல்ல முடியாதவாறு மாவட்ட பாஜக அலுவலகத்தின் உள்ளே வைத்து கைது செய்ய முயன்றனர். போலீசாரின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சட்ட ஒழுங்கு பூதத்தை அரசு கிளப்புவதும், நீதிமன்றம் சென்று ஆர் எஸ் எஸ் அனுமதி பெற்று வந்து ஊர்வலம் நடத்துவதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலை விரைவில் மாற்றப்படும் என்கின்றனர் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள்.