சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பது அபாயகரமான சோதனை எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை ஆய்வு செய்து தற்போதைய நிலையே நீடிக்க அறிவுறுத்தியுள்ள நிலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் இந்த ஒப்பந்தப் புள்ளியை கோரியிருக்கக் கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொழிலாளர் நலத்துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை எனவும், பல ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வராததால் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் நிரந்தர ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தடுக்கப்படும் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பது ஊதிய முரண்பாடுக்கு வழிவகுக்கும் எனவும் இது அபாயகரமான சோதனை எனவும் தெரிவித்து ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்பட்டால் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது எனவும், தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் ஓட்டுநர்களால் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும் எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, அனைத்துப் போக்குவரத்துக் கழகத்திலும் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப வல்லுநர்கள் காலிப் பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.