சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதே போன்று சென்னை சைதாப்பேட்டையில் பொன்முடி வீட்டில் சுமார் 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது. பின்னர் அவர் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அதிகாலை அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். தற்போது அடுத்தடுத்த திமுக அமைச்சர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.