பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா உணவு திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் ஏழைகளின் நலன் கருதி இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. முதலில் 3 மாதத்திற்கு அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் பிறகு படிப்படியாக 2022ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் பருப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 80 கோடி பேர் மக்கள் பயனடைந்து வந்தனர்.
தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஏழைகளுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என அறிவித்து இருந்தார்.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் (நவம்பர் 29) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படும்.
தொடர்ந்து ஏழை, எளிய மக்கள் பயனடைவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு வகையிலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது இலவச உணவு தானியம் திட்டம் அங்கம் வகிக்கும். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.