நாடு முழுவதும் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஆளில்லா குறு விமானத்தை இயக்கும் பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் பயனாளர்களுக்கு சென்றடைந்ததை உறுதி செய்யவும், அவற்றை மேம்படுத்தவும்
“வளர்ந்த இந்தியா தீர்மான யாத்திரை” நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் திட்டப் பயனாளர்களிடம் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் பயனாளர்கள் அடைந்த பலன்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். பின்னர் பிரதமரின் பெண் விவசாயி டிரோன் திட்டத்தை பிரதமர் நரேந்திர நேற்று (நவம்பர் 30) மோடி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சுய உதவிக் குழு பெண்களுக்கு ட்ரோன்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் சுய உதவிக்குழு பெண்களுக்கு 15 ஆயிரம் ட்ரோன்கள் வழங்கப்படும். இதன் மூலம் விவசாய பணிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
இந்த ட்ரோன் பயிற்சி சுய உதவிக்குழு பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். பிரதமரின் சுகாதாரமான இந்தியா தொலை நோக்குக்காக, மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் கிடைக்க பிரதமர் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் மருந்தக திட்டம் மூலம், குறைந்த விலையில் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000மாவது மக்கள் மருந்தகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மக்கள் மருந்தகத்தின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.