மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் வருகின்ற (டிசம்பர் 3-) ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், நேற்று (நவம்பர் 30) தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.
இதில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியமைக்கும் என்று சிவோட்டர் அமைப்பு கணித்துள்ளது. ராஜஸ்தானில் 114 முதல் 124 தொகுதிகளைப் பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல காங்கிரஸ் 67 முதல் 77 தொகுதிகளை மட்டுமே வெல்லும் நிலை உள்ளது. இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சி அமையஉள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பை ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பாஜக 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் 97 முதல் 107 தொகுதிகளில் வெல்லும் என்றும், மற்ற கட்சிகள் 0 -2 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிறுமாநிலங்களான சத்தீஸ்கர், தெலங்கானாவில் காங்கிரசுக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டாலும் சத்தீஸ்கரில் கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.