தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும் தற்போது மூன்று மாநிலங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதற்கு மொத்தம் 4 காரணங்கள் உள்ளன என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: முதலில் பா.ஜ.க.வின் சித்தாந்தம் இந்துத்துவா. இரண்டாவது தேசியவாதம். மூன்றாவது நிதி வலிமை. நான்காவது அடித்தட்டு மக்களுக்கு உதவ அவர்கள் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜ் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், பா.ஜ.க., அதை வைத்து மட்டுமே வாக்குகளை பெறுவதில்லை. எதிர்க்கட்சியினர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் இந்த நான்கு விஷயங்களில் குறைந்தது மூன்றுக்குப் பதிலடி தர வேண்டும். இல்லையெனில் நீங்க என்ன செய்தாலும், எப்படி கூட்டணி அமைத்தாலும் 10ல் 7 முறை உங்களுக்குத் தோல்வியே மிஞ்சும்.
காங்கிரஸ் கட்சி ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவுவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். கூடுதல் அதிகாரம் தலைமையிடம் இருக்க வேண்டும். தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மக்கள் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். இதன் காரணமாகத்தான் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்றபடி அங்கே காங்கிரசுக்கு ஒன்றும் செல்வாக்கு இல்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.