ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும். சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டம் தற்காலிகமானதே. எனவே அந்த சட்டம் நிரந்தரமான வசதியை கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திர காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளனர்.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, ஜம்மு~காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதேபோன்று அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவு, நிரந்தர குடியுரிமை வழங்குவது தொடர்பாகவும், சில சிறப்பு உரிமைகள், சலுகைகள் அளிப்பதாகவும் இருந்தது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் கடந்த ஆகஸ்ட் 5, 2019ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜம்மு~காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று (டிசம்பர் 11) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
மாறுபட்ட தீர்ப்பு:
5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்புகள் அளித்திருந்தாலும் பெரும்பான்மையான நீதிபதிகள் மத்திய அரசின் நடவடிக்கை ஆதரவாகவும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில்:
மூன்று தீர்ப்புகள் இருந்தாலும் ஒரே தீர்ப்பாக தான் கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்க முடியாது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம்.
அவசரச் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது அரசியலமைப்பில் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இந்தியாவை உள்ளடக்கியது தான் காஷ்மீர்.
மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது; அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லும். அதன்படி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும். அடுத்தாண்டு (2024) செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறோம்.
தேர்தலை நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி நாட்டில் பிரிவினையை தூண்டிவிடும் சிலருக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சம்மட்டி அடியை கொடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு:
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது பற்றி தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில்; சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது.
இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பு.
நீதிமன்றம், அதன் ஆழ்ந்த ஞானத்தில், இந்தியர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் மேலாக அன்பாகவும், போற்றி வைத்திருக்கும் ஒற்றுமையின் சாரத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.
முன்னேற்றத்தின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டுமல்லாமல், 370வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரவேற்பு:
இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் “ஒரே நாடு, ஒரே கொடி” என்ற தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் வகையில், நமது பிரதமர் நரேந்திர மோடி அரசு 2019இல் சிறப்பு சட்டம் 370-ஐ ரத்து செய்ய ஒரு வரலாற்று முடிவை எடுத்தது, இதற்கு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு தனி அரசியலமைப்பு, மாநில கொடி மற்றும் மாநிலத்தின் உள் நிர்வாகத்தின் மீது சுயாட்சி ஆகியவற்றை வழங்கி இருந்தது.
பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்து உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக சிறப்பு அந்தஸ்து 370 வழங்குவதை நீண்ட காலமாக எடுத்துக் கொண்டனர். 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைதி திரும்பியது, முதல் முறையாக வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியது.
சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக விதி என்று உச்சநீதிமன்றம் கூறியது, நமது பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை நிரூபித்தது எனத் தெரிவித்துள்ளார்.
பிரிவு 370 என்றால் என்ன?
1947இல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, முன்னாள் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் நிபந்தனையின்றி இணைந்தது போல ஜம்மு காஷ்மீரும் இணைந்தது. ஆனாலும் அதற்கென 370 என்ற சிறப்பு சலுகை ஒன்றை வழங்கி பிரிவினைக்கு வித்திட்டது காங்கிரஸ் அரசு!
1949 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த சட்டப்பிரிவு, இந்திய அரசியலமைப்பிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விலக்கு அளித்தது.
நிதி, பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு தவிர அனைத்து விஷயங்களிலும் இந்திய நிர்வகிக்கும் பிராந்திய அதிகார வரம்பு அதன் சொந்த சட்டங்களை உருவாக்க அனுமதித்தது. அது ஒரு தனி அரசியலமைப்பு மற்றும் ஒரு தனி கொடியை நிறுவியது மற்றும் வெளியாட்களுக்கு மாநிலத்தில் சொத்து வாங்குவதற்கான உரிமைகளை மறுத்தது. அதாவது மாநிலத்தில் வசிப்பவர்கள் சொத்துரிமை மற்றும் குடியுரிமை போன்ற விஷயங்களில் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டு வெவ்வேறு சட்டங்களின் கீழ் வாழ்ந்தனர்.
பிரிவு 35ஏ என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் பிரதேச விதிமுறைகளின் பழைய விதிகளைத் தொடர 1954 இல் ஜனாதிபதியின் உத்தரவின் மூலம் பிரிவு 35ஏ அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள உள்ளூர் சட்டமன்றம் அப்பகுதியின் நிரந்தர குடியிருப்பாளர்களை வரையறுக்க அனுமதித்தது.
வெளியாட்கள் நிரந்தரமாக குடியேறுவதையோ, நிலம் வாங்குவதையோ, உள்ளூர் அரசாங்க வேலைகளை வைத்திருப்பதையோ அல்லது கல்வி உதவித்தொகையை பெறுவதையோ இது தடை செய்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசிப்பவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து ஒரு நபரை திருமணம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதையும் தடுக்கிறது. அத்தகைய பெண்களின் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடு நீட்டிக்கப்பட்டிந்தது.
தற்போது 370 நீக்கப்பட்டதால் பிற மாநிலத்தவரும் காஷ்மீரில் இனி குடியேறலாம்: இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் சொத்துக்களைப் பெற்று நிரந்தரமாக குடியேறும் உரிமையைப் பெறுவார்கள்.
இதனால்தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள அந்நிய நாட்டு பிரிவினை சக்திகள் 370 சட்டப்பிரிவை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே அங்கு வசித்து வந்த லட்சக்கணக்கான ஹிந்துக்களை விரட்டி அடித்தனர். தற்போது 370 ரத்துக்கு பின்னர் மீண்டும் அங்கு காஷ்மீர் பண்டிட்கள் தங்களது பூர்வீக நிலத்திற்கே குடிபெயர்ந்து வருகின்றனர். இந்தியாவுடன் முழுமையாக இணைவதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த தடை தற்போது விலக்கப்பட்டு இணைப்பு முழுமையாகி உள்ளது. இது மோடி அரசின் மிகப் பெரிய வரலாற்று சாதனை!