கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் கான் சென்ற கார் மீது எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முதல்வர் பினராய் விஜயன் சதி செய்துள்ளார் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக நக்ஸைலைட் ஆதிக்கம் பெருகி வருகிறது.
இதற்கிடையே மாநில அரசின் அவசரச் சட்டங்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த சமயத்தில் நேற்று இரவு (டிசம்பர் 11) ஆளுநர் சென்ற கார் மீது ஆளும் கட்சியின் எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள ஆளுநர் ஆரிஃப் கான் விமான நிலையம் செல்வதற்காக ஆளுநர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டார். கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வழிமறித்துக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்புத் (எஸ்.எஃப்.ஐ.) தொண்டர்கள் ஆளுநருக்கு கருப்புக் கொடி காண்பித்தனர். மேலும் கார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். இது பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆரிப் கான், “எனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இச்சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல. வேண்டுமென்றே என்னை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
என்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்து இவர்களை அனுப்புவது முதல்வர் பினராயி விஜயன் தான். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்னை நோக்கி கருப்புக் கொடியை காட்டியது மட்டுமல்லாமல், காரின் இருபுறத்திலும் தாக்கினர். அரசியலில் கருத்து வேறுபாடு உடல் ரீதியான வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது.
எனது காரை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கருப்புக் கொடி காட்டியதோடு வாகனத்தையும் தாக்கினர். முதல்வர் நிகழ்ச்சியில் இதுபோன்று போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? முதல்வரின் கார் அருகே யாரேனும் வர இயலுமா? அதற்கு காவல்துறை அனுமதிக்குமா? ஆனால், எனது கார் சென்ற வழியில் கருப்புக் கொடியுடன் போராட்டக்காரர்கள் இருந்தனர்.
உடனே போலீஸார் அவசர அவசரமாக போராட்டக்காரர்களை கார்களுக்குள் தள்ளினார்கள். அவ்வளவுதான் அவர்கள் அங்கிருந்து கார்களில் பறந்து விட்டனர். அதனால்தான் சொல்கிறேன் இது நிச்சயமாக பினராயி விஜயனின் சதித்திட்டம் ஆகும். அவர்தான் என்னைத் தாக்குவதற்கு ஆட்களை அனுப்பியுள்ளார். திருவனந்தபுரம் சாலைகளை குண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்” என்றார்.
ஆளுநர் மீது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளுநர் ஆரிஃப் கான் செல்லும் பாதை குறித்த விபரங்கள் எப்படி வெளியானது? ஆளுநர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.