மத்திய பிரதேஷ்: புதிய முதல்வர் மோகன் யாதவ்

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வது பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று போபாலில் (டிசம்பர் 11) நடைபெற்றது. தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பிரகலாத் சிங் படேல், நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்க்கியா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலீக்கப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சிவராஜ் சிங் சவுகான், பார்வையாளராக நியமனம் செய்யப்பட்ட ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் பின்னர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மோகன் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது; மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்வேன் என்றும், தங்களது அன்பிற்கும், வாழ்த்துக்களும் நன்றி என தெரிவித்தார்.

மோகன் யாதவ், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் போட்டியிட்டு 12 ஆயிரத்து 941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்த தொகுதி மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவரின் பின்னணியை பார்ப்போம்:

58 வயதான மோகன் யாதவ் 1965 ஆம் ஆண்டு உஜ்ஜைனியில் பிறந்தார். சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் மற்றும் எம்.பி.ஏ., பி.ஹெச்டி உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். தொழிலதிபர், அரசியல்வாதி, வழக்கறிஞர் என்ற பன்முகம் கொண்ட அவர் 1980 ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.-யில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

மோகன் யாதவ் முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு கோயில் நகரமான தெற்கு உஜ்ஜைனில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சித்துறையின் தலைவர், உஜ்ஜைன் நகராட்சி மேம்பாட்டு கழகத்தின் தலைவர், மல்யுத்த வீரர் மற்றும் அந்த அமைப்பின் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

2018 – 2023 ஆகிய ஆண்டுகளிலும் தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் போட்டியிட்டு மோகன் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், கடந்த 2020ஆம் ஆண்டு சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

உயர்கல்வித்துறை அமைச்சராக மோகன் யாதவ் பதவி வகித்த போது, ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை உள்ளிட்ட ஆன்மீக படிப்புகளை கல்லூரி பாடத்திட்டங்களில் அறிமுகம் செய்துள்ளார். இதனால் அம்மாநில மக்களிடம் வரவேற்பையும் பெற்றார். மத்திய பிரதேச மாநிலத்தின் 19வது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் யாதவ், அம்மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3வது முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

புதியவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஆதரவாக இருப்பதை மத்திய பிரதேச மாநில முதல்வர் தேர்வில் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை பா.ஜ.க., நிரூபித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top