ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்று ஒருவாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பஜன்லால் ஷர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் 3 மாநிலங்களுக்குமான முதல்வர்களை தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடந்து வந்தன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு முதல்வர் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு இன்று அம்மாநிலத்திற்கு சென்றது. தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கப்பட்டது. அப்போது புதிய முதல்வராக பஜன் லால் ஷர்மா ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன் லால் ஷர்மாவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.