ஸ்ரீ ஜோதிஜி – முன் உதாரணமான ஸ்வயம்சேவக்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரக் சுந்தர ஜோதி நேற்று (10.12.2023) ரயில் விபத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திரு சுந்தரம் திருமதி உண்ணாமலை தம்பதிகளுக்கு பிறந்த ஒரே மகன் திரு சுந்தர ஜோதி, இவர் 1955ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தார்.

அப்போது வட சென்னை பட்டாளம் பகுதியில் ஷாகா நன்கு நடைபெற்று வந்தது. திரு சுந்தரம் அவர்கள் புளியந்தோப்பு ஷாகாவின் ஸ்வயம்சேவக். அவர் ஷாகா செல்லும் போது, தனது மகன் திரு ஜோதியையும் அழைத்து செல்வார். திரு ஜோதிஜி பால முதல் ஸ்வயம்சேவக்.
திரு சுந்தரம் ஙி & சி மில்லில் பணியாற்றினார். 1948 சங்க தடையை எதிர்த்து சத்யகிரகம் செய்து சிறை சென்றுள்ளார்.

ஜோதிஜி பியுசி படிப்பை முடிந்தவுடன் வடசென்னையில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு ப்ரதம வர்ஷ சங்க சிக்ஷா வர்கவை திருப்பராய்துரையில் முடித்தார். 1978ஆம் ஆண்டு தன்னுடைய வேலை ராஜினாமா செய்துவிட்டு சேலத்தில் நடைபெற்ற த்வீதிய வர்ஷ சங்க சிக்ஷா வர்கவில் கலந்துக் கொண்டார். வர்க முடிந்த பின் சங்க பிரச்சாரக் ஆனார். 1980ல் மூன்றாம் ஆண்டு வர்க முடித்தார்.

ஸ்ரீ ஜோதிஜி பிரச்சாரக் பயணத்தில் 1978ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகர் பிரச்சாரக். 1980 ஆண்டு வேலூர் தாலுகா பிரச்சாரக். 1981ல் வேலூர் ஜில்லா பிரச்சாரக். 84ல் திருவண்ணாமலை ஜில்லா பிரச்சாரக். 87ல் வேலூர் சஹவிபாக் பிரச்சாரக். 1989ல் ராமேஸ்வரம் விபாக் பிரச்சாரக். 1995 முதல் விஜயபாதம் ஆசிரியர்.

உடல் நிலை சரியில்லாத காரணத்திற்காக 2010 முதல் விஜயபாரதம் மேலாளராக இருந்தார். 2016முதல் சென்னை சஹ கார்யாலய பிரமுக்காக இருந்தார். உடல் நிலை இன்னும் மோசம் அடைந்த பின் 2020 முதல் அவர் எவ்வித பொறுப்பும் இல்லாத பிரச்சாரக்காக கார்யாலயத்தில் இருந்தார்.

திருவண்ணாமலையில் 1986ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் பிராந்த ஷிபிர் நடைபெற்றது. அதில் சர்சங்கசாலக் ப.பூ. தேவரஸ் ஜி கலந்து கொண்டார். அந்த ஷிபிர் ஏற்பாடுகளை எல்லாம் செம்மையாக கவனித்தார். ஷிபிரில் புதிய பாடல் போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு இருந்தது. அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் அவர் ஒரு புதிய பாடலை தயாரித்தார். அதற்கு அவரே மெட்டு போட்டு நிகழ்ச்சியில் பாடினார். அந்த பாடல், ‘ஹிந்து என்ற தேசியம் சங்கம் ஒன்றே தந்திரம், வாய்மையே வெல்லும்’. இந்த பாடல் ஷிபிரில் இரண்டாவதாக வந்தது.

அவர் பிரச்சாரக்காக இருக்கும் போது, ஒரு முறை அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து அவரது உடல் மிகவும் பாதித்தது. இதை கேள்விப்பட்ட அவரது தாயார் மிகவும் வருந்தினார். வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து உடல்நிலையை சரி செய்து பிறகு போகட்டுமே என்று அவர் தன்னுடைய கணவரிடம் வற்புறுத்தினார். அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க சங்க அதிகாரிகளிடம் பேசி, அவர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவர் உடல் நிலை சீரானது. ஆனால் அவர் தாயார் இன்னும் சில நாட்கள் வீட்டில் தங்கியிருக்க கட்டாயப்படுத்தினார். அவரது தந்தையார் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மேலும் சில நாட்கள் ஆகியும் ஜோதிஜியை அனுப்புவதற்கு அவரது தாயார் தயாராகயில்லை. இதை கண்ட ஜோதிஜியின் தந்தை கார்யாலயத்திற்கு வந்து, சங்கம் அதிகாரிகளிடம் ’சீக்கிரம் ஜோதிஜியை பிரச்சாரக் ஆக மீண்டும் அழைத்து செல்லுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி சங்க அதிகாரிகள் ஜோதிஜியிடம் பேசினார்கள். ஒரு நாள் ஜோதிஜி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தன்னுடையை கார்ய க்ஷேத்திரத்திற்கு சென்று விட்டார்.

அவர் ஸ்ரீ வீரபாகுஜியுடன் 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து வேலூர் விபாக்கில் பல நிகழ்ச்சிகளையும், பல சாகஷங்களையும் நடத்தியுள்ளனர். அப்போது வேலூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் மிகவும் பேசு பொருளாக இருந்தது.

வேலூருக்கு இருந்த அவ பெயரை நீக்க வேண்டும் என்பதற்காக மறைந்த ஸ்ரீ வீரபாகுஜியுடன் இணைந்து கடும் முயற்சி எடுத்தார். அதன் பயனாக 1981ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போது அயோத்தி ஸ்ரீ ராம விக்கிரம் பிரதிஷ்டைக்கு அது முன்னோடியாக அமைந்தது.

அவர் விஜயபாரதம் ஆசிரியராக இருக்கும் போது, கடுமையாக உழைப்பார். தினசரி மாலையில் வெளியில் சென்று எழுத்தாளர்களை சந்திப்பார். அன்று வந்த எல்லா ஆங்கில பத்திரிகைகளையெல்லாம் படித்து, அடுத்த வாரம் எதை பற்றி கட்டுரை வர வேண்டும் என்று குறிப்பு எடுத்து கொள்வார். தினசரி அவர் தூங்கும் போது இரவு 12 மணி, ஒரு மணி ஆகும். பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கினார். இதழியல் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

திரு ஜோதிஜி பல முக்ய நிகழ்வுகளையும் தன்னுடைய நாட்குறிப்பில் பதிவு செய்து வந்தார். அதில் தன்னுடைய குடும்பத்தில் நடந்த நல்லது, கெட்டது போன்ற விஷயங்களையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் பட்டாளம் ஷாகாவில் முக்ய சிக்ஷக்காக இருக்கும் போது இருந்த ஸ்வயம்சேவகர்களின் பெயர்களையும் எழுதியுள்ளார். அவர் பிரச்சாரக் வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை தொகுத்து இருக்கிறார்.

அவரது அகால மரணம் நம் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா நற்கதி அடைய ஒரே நாடு இறைவனை பிரார்த்திக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top