சென்னை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? என்று பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. உடனடியாக சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப் போகிறோம் என்று கூறினார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த 2022ஆம் ஆண்டு முழுவதும், பெரிய அளவிலான மழை எதுவும் இல்லாததால், சென்னையில் மழைநீர் கடந்த ஆண்டு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் தாங்கள் செய்த மழைநீர் வடிகால் பணிகளால்தான், கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று வெட்கமே இல்லாமல் பொய் சொன்னார்கள் திமுகவினர்.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே, 95 சதவீத வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருந்தனர். பத்து நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால், மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்றார் அமைச்சர் சேகர் பாபு, ஒரு ஆண்டு கடந்து விட்டது. இந்த 2023ஆம் ஆண்டு முழுவதும், மீண்டும் வடிகால் பணிகள் நடைபெற்று வந்தன. மீண்டும் ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்துச் சிக்கலால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தற்போது நவம்பர் மாதத்தில் 98 சதவீத பணிகள் நிறைவுபெற்று விட்டன என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். முதலமைச்சர் உள்ளிட்டோர் இனி சென்னையில் மழை வெள்ளம் இருக்காது. மகிழ்ச்சி வெள்ளம்தான் இருக்கும் என்று எதுகை மோனையில் வசனம் பேசினர்.
ஆனால், திமுகவினர் சொன்ன அனைத்தும் பொய் என்பதை, மழை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது. முக்கியச் சாலைகளில் மட்டும் வெள்ளத்தை வெளியேற்றி விட்டு, உட்புறச் சாலைகள் வெள்ளத்தால் சூழ்ந்திருப்பதை நான்கைந்து நாட்களாக மறைத்து வந்த திமுக அரசு, இதற்கு மேலும் மறைக்க முடியாமல் தவிப்பதைக் காண முடிகிறது.
சமீபத்தில் 98 சதவீதம் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறிய அமைச்சர் கே.என்.நேரு தற்போது வெறும் 42 சதவீத மட்டுமே முடிவடைந்துள்ளது என்று மாற்றிப் பேசுகிறார். பொதுமக்களுக்குத் தவறான தகவல்களைத் தந்து, தகுந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி, மீண்டும் ஒரு முறை தலைநகரைப் பலி கொடுத்திருக்கிறது திமுக அரசு. உண்மையாகவே இவர்கள் என்ன பணிகள் செய்துள்ளார்கள் என்ற கேள்வியை, பொதுமக்கள் திமுகவை நோக்கி வைக்கத் தொடங்கியுள்ளார்கள்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க., கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூ.450 கோடி வீதம் இரண்டு தவணைகளில் ரூ.900 கோடி நிதி வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, மத்திய அரசு வழங்கியுள்ள இந்த பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது என்ற நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாமல் வெறும் ரூ.6,000 மட்டுமே நிவாரண நிதி என்ற அறிவிப்பு பொதுமக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அன்று, மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு, உடைகள் இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ரூ.2,500 மற்றும் உடமைகள் இழப்பீடாக ரூ.2,500 மற்றும் ஒரு வாரத்துக்குக் குறைவான மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைக்கு ரூ.5,400 வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழக பாஜக இதன் அடிப்படையில்தான் ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது.
மேலும், மத்திய அரசின் அதே சுற்றறிக்கையில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 எனவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 எனவும்! மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8500 எனவும்! சேதமடைந்த குடிசை வீடுகளுக்கான இழப்பீடு ரூ.8000 ஆகவும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் இழப்பீடு ரூ.37,500 எனவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ.4,000 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்களும் பேரிடர் காலங்களில் இழப்பீடாக இந்தத் தொகையையே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல, தவறான தகவல் அளித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமே பொதுமக்களுக்கு நிவாரணமாக அறிவித்திருக்கிறாரே தவிர, மாநில அரசின் பங்கு என்று எதுவும் இல்லை. எனவே, அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரண நிதியை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல, திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.