மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட தென்சென்னையில் உள்ள வேளச்சேரி, மடிப்பாக்கம், நாராயணபுரம், பள்ளிக்கரணை, ரேடியல் சாலை, பெரும்பாக்கம், ஒக்கியம்மேடு, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழு நேற்று (டிசம்பர் 12) ஆய்வு மேற்கொண்டது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், ரங்கநாத் ஆடம், திமான் சிங் ஆகியோர், வெள்ளம் பாதித்த பகுதிகளை இந்தக் குழு பார்வையிட்டது.
தமிழக அரசின் அதிகாரி ககன்தீப் சிங் பேடி பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை காண்பித்து விளக்கினார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் ஷிவ்ஹரே தலைமையில், பவ்யா பாண்டே மற்றும் விஜயகுமார் அடங்கிய மூவர் குழுவினர் வடசென்னையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சூளை, பட்டாளம், புளியந்தோப்பு, பெரம்பூர், மணலி, திருவொற்றியூர், எண்ணுர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இன்று இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ளப் பாதிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின்னர் மத்திய குழு முதல்வரை சந்தித்தது. அதனை தொடர்ந்து இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் அதிகாரிகள் குழு சமர்ப்பிக்கும்.