திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று (டிசம்பர் 12) ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மீது ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நடத்திய தாக்குதலில் பக்தர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் புகழ் மச்சேந்திரன் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் மூலஸ்தானத்தில் இன்று (டிசம்பர் 12) ரத்தம் சிந்தியுள்ளது. சிந்தியவர்கள் ஐயப்ப பக்தர்கள். அவர்களை தாக்கியவர்கள் தற்காலிக பணியில் சேர்க்கப்பட்ட 11 காவலர்கள். ஏற்கனவே கோவில் காவல் பணிக்கு 40 பேர் உள்ளனர். அவர்களை விடுவித்து, தற்காலிக பணிக்கு ஆட்களை நியமித்தது ஏன்?
ஒரு வருடத்திற்கு முன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்ட சிலர் கோவிலுக்குள் சென்று, நிர்வாகத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினர். இது சர்ச்சையானது, மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவே தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கியதாக புகாரும் உள்ளது.
கடந்த வாரம் கோவிலுக்குள் வந்த பெண் பக்தர் ஒருவரை சுவாமி கும்பிடும் இடத்தில் ஒழுங்கு படுத்துகிறோம் என்ற பெயரில் தொட்டு இம்சித்ததாக புகார் எழுந்தது. அந்தப் பெண் கூச்சலிட அவரை கோவில் நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
கோவில் பாதுகாப்புக்கு என்று கூறி, ரவுடிகள் போல செயல்படும் நபர்கள் எதற்கு? ஸ்ரீரங்கத்தை விட திருப்பதி கோவிலில் பக்தர் கூட்டம் அதிகம். ஆனால் அங்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் எழுவதில்லை. தற்காலிக பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.