சீனா நாட்டினருக்கு விசா வழங்கியதில் முறைகேடு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீனா நாட்டினருக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது 263 சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு விசாரணையில், நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையத்தை நிறுவும் ஒரு குழும நிறுவனத்தின் உயர் அதிகாரி மூலமாக, கார்த்தி மற்றும் அவரது சகாவான பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக கார்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, கடந்த ஆண்டு அவரது இருப்பிடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் பாஸ்கர ராமனை கைது செய்தது. சிபிஐ குற்றச்சாட்டின்படி, 263 சீன தொழிலாளர்களுக்கு திட்ட விசாக்களை மீண்டும் வழங்குவது தொடர்பாக ரூ.50 லட்சம் கைமாறி இருப்பதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக கார்த்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு அவரது தரப்பில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருப்பதாக, அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் ஆகிய வழக்குகளின் வரிசையில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான 3வது பண மோசடி வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top