காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த நாளிலேயே, நாடாளுமன்றத்தில் தாக்குல் நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் அந்த பயங்கரவாதிக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அமெரிக்காவில் ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் உள்ளான். இவன் அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளான்.
கடந்த 2001 டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டல் விடுத்திருந்தான்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்தப் போவதாக அவன் மிரட்டல் விடுத்த நாளிலேயே நேற்று (டிசம்பர் 13) நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், அச்சுறுத்தல் விடுத்து ஒருசில பயங்கரவாதிகள் விளம்பரத்தை தேடிக் கொள்கின்றனர். எனினும் இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகத் தீவிரமாக எடுத்துள்ளது. ‘‘இந்த விவகாரத்தை அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம். அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்,’’ என்றார்.