தொழிலதிபர் ஹீராநந்தனியிடம் ரூ.2 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்களும் பெற்றுக் கொண்டு, தொழிலதிபர் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி வந்த குற்றச்சாட்டு உறுதியானது. இதன் காரணமாக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபேயால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. மக்களவையில் மஹூவா எழுப்பிய 61 கேள்விகளில் 50, அதானிக்கு எதிரானவை. தொழிலதிபர் தர்ஷன் ஹிராந்தனியிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு மஹூவா கேள்விகளை கேட்டார். இதற்காக நாடாளுமன்ற இணையதளத்தின் தனது பிரத்யேக உள்நுழைவு அங்கீகாரங்களையும் வெளியாட்களுக்கு தந்தார் என எம்.பி. நிஷிகாந்தின் குற்றச்சாட்டு பரபரப்பாக பேசப்பட்டது.
தொழிலதிபரான ஹிராநந்தனியிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சமும், பரிசுப் பொருட்களும் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
‘‘நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்கள் கேள்வி கேட்பதற்கான, தனது ‘லாகின் ஐ.டி.யை மஹூவா என்னிடம் கொடுத்தார்’’ என ஹிராநந்தனியே கூறியது இந்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்துடன் மொய்தாரவின் லாகின் ஐடியானது 42 முறை துபாயில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டிய கேள்விகள், அங்கிருந்து அப்லோடு செய்யப்பட்டுள்ளன. இதை விசாரணை நடத்திய நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மூலம் கண்டுபிடித்து தனது அறிக்கையில் கூறியிருந்தது மஹூவா மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின் அடிப்படையில் எம்.பி., பதவியில் இருந்து மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதற்கு நாம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும். ஆனால் மொய்த்ரா போன்ற ஊழல் நபர் ஜனநாயகத்துக்கு ஒரு கரும்புள்ளி.