பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது சூப்பர் கம்ப்யூட்டருடன் நவீன வானிலை ஆய்வு மையம் அமைப்பதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கிய நிதி எங்கே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும். எவ்வளவு மழை பெய்யும், ஒரு இடத்தில் எத்தனை சென்டி மீட்டர் மழை பெய்யும், பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது முதல் பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். அவரை இலாகா மாற்றிய பின்னர் அந்த பணம் என்ன ஆனது? சூப்பர் கம்ப்யூட்டர் ஏன் வாங்கவில்லை? அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மழை வெள்ளத்தால் தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எதையும் கண்டுகொள்ளாமல் இ.ண்.டி. கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு சென்றது தென் மாவட்ட மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.