கிறிஸ்தவர்கள் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது – கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்! 

வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர். பல வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதற்கு இதுவே சாட்சி என நேற்று ( டிசம்பர் 25 ) பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று (டிசம்பர் 25) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவின்போது கிறிஸ்தவ சமூகத்தினருடனான தனது நெருக்கமான மற்றும் அன்பான உறவுகளை நினைவுகூர்ந்து அவர் பேசியதாவது:

எப்போதுமே சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு சேவையாற்றுவதில் கிறிஸ்தவ சமூகத்தினர் முன்னிலையில் உள்ளனர். தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ தலைவர்களும், சிந்தனையாளர்களும் அங்கம் வகித்தனர். கல்வி, சுகாதார துறைகளில் கிறிஸ்தவ சமூகத்தினரால் நடத்தப்படும் நிறுவனங்கள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைத் தத்துவம் இரக்கம், சேவையை மையமாகக் கொண்டது. சமமான நீதியுடன் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கப் பணியாற்றியவர் அவர்.
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், எனது அரசுக்கு வழிகாட்டும் ஒளியாக இந்த மாண்புகள் உள்ளன. வளர்ச்சியின் பலன்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை அரசு உறுதி செய்கிறது. அந்த வகையில் கிறிஸ்தவ சமூகத்தினரும் பலனடைந்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் பலன் அடைகின்றனர்.

ஆரோக்கிய உடலுக்கான ‘ஃபிட் இந்தியா’ இயக்கம், சிறுதானிய பயன்பாடு, போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரம் என இளைஞர்களுக்கு பலனளிக்கும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கிறிஸ்தவ சமூக தலைவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சமூக ரீதியில் விழிப்புடையவர்கள் என்ற அடிப்படையில் கரியமில வாயு உமிழ்வு குறைப்பு, நிலையான வாழ்வியல் முறை ஊக்குவிப்பு போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பிரசாரங்களில் கிறிஸ்தவ சமூகத்தினர் முக்கியப் பங்காற்ற முடியும். உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசின் பிரசாரத்துக்கும் ஆதரவளிக்க வேண்டும். கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் நாட்டை நாம் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வோம்.

கடந்த 2021ஆம் ஆண்டில் போப் ஃபிரான்சிஸ் உடனான எனது சந்திப்பு மறக்க முடியாத தருணம். சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், பருவநிலை மாறுபாடு பிரச்னை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.

வறுமைக்கு முடிவுகட்ட பணியாற்றுவோரை இயேசு கிறிஸ்து ஆசிர்வதிப்பார் எனும் அவரது வார்த்தைகள், ‘அனைவரின் ஆதரவு, நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற மத்திய அரசின் தாரக மந்திரத்தைப் பிரதிபலிக்கின்றன என்றார்.

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர். பல வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதற்கு இதுவே சாட்சி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top