வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்திய பெருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். அந்தக் கப்பலில் இருந்த 21 இந்தியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதேபோல் மத்திய ஆப்ரிக்க நாடான, காபோனுக்கு சொந்தமான, இந்திய தேசியக் கொடியுடன் கூடிய ‘எம்.வி.சாய் பாபா’ கச்சா எண்ணெய் வணிக கப்பல் மீதும் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலில் பயணித்த 25 இந்திய பணியாளர்கள் உயிர் தப்பினர். இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்திய போர்க்கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வணிகக் கப்பலை பாதுகாப்புடன் இந்தியாவுக்கு அழைத்து வந்தது.

இந்த நிலையில், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ளவர்களை கண்டுப்பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்றவாளிகள் ஆழ்கடலில் மறைந்து இருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேற்கு அரபிக்கடல் எல்லைப் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக மத்திய அரசு மூன்று போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top