லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டெல்லி தலைமையகத்துக்கு அமலாக்கத்துறை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு அரசு மருத்துவராகவும், திமுகவின் மருத்துவ அணியிலும் உள்ளார். இதற்கிடையே அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் இருக்க மதுரை அமலாக்கத்துறை அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து மதுரையில் செயல்பட்டு வந்த அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து 35 பேர் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக அத்துமீறி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது.
முக்கிய வழக்குகளில் ரகசியம் காக்கப்பட வேண்டிய சாட்சிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
திமுக அமைச்சர்கள் மற்றும் மணல் குவாரி உரிமையாளர்கள் பலர் மீதான ஊழல் வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நகல் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். லஞ்ச வழக்கில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் வழக்கை விசாரிக்க அன்கித்திவாரி மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அங்கித் திவாரி மீதான வழக்கை அமலாக்கத்துறை டெல்லி தலைமையகத்துக்கு மாற்றம் செய்துள்ளது. எனவே அங்கித் திவாரியையும், இந்த வழக்கு விசாரணையையும், அமலாக்கத் துறையிடம் லஞ்ச ஒழிப்பு துறை ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விசாரணை முடிவில் திமுகவினரின் சூழ்ச்சி தெரியவரும். திமுகவை சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் முதல் கட்டமாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தும். அவரை தொடர்ந்து அடுத்தடுத்த விசாரணையில் பலர் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.