ஊழல் கட்சிகளின் மத்தியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நல்லாட்சி மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரை நேற்று (டிசம்பர் 27) நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. அப்போது இளைஞர்கள், பொதுமக்கள் என பல ஆயிரக்கணக்காணோர்களை சந்தித்து மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சியை எடுத்துரைத்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இன்றைய (டிசம்பர் 27) என் மண் என் மக்கள் பயணம், மானிடர்களின் கேடுகளைப் போக்கி, துன்பமில்லா வாழ்வு தரும் கேடிலியப்பர் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கும் கீழ்வேளூர் தொகுதியில் சிறப்பாக நடந்தேறியது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயம் இந்தத் தொகுதியில் தான் உள்ளது. விவசாயிகளும் மீனவர்களும் நிறைந்த பகுதி.
தமிழக வரலாற்றின் கரும்புள்ளியான கீழ்வெண்மணி சம்பவம் நடந்தது இந்த சட்டமன்றத் தொகுதியில் தான். 1968 இல் திமுக ஆட்சியில், கூலி உயர்வு கேட்ட ஒரே குற்றத்திற்காக பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த 42 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பெரியார் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக, 1969ஆம் ஆண்டு செம்பனார் கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், “தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற வருமானத்தில் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
ஆனால் பாஜக, ஏழைகள் வாழ்க்கை முன்னேற வேண்டும் என்று விரும்புகிறது. ஊழல் கட்சிகள் மத்தியில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நல்லாட்சி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று நாகப்பட்டினத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நமது மத்திய அரசு 2300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 35,647 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 24,748 வீடுகளில் குழாயில் குடிநீர், 91,043 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 42,372 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 64,223 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 53,252 விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 3,879 கோடி ரூபாய், முத்ரா கடன் உதவி, என நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி மத்சய சம்பதா திட்டம் மீனவர் நலனுக்காக முதல் முறையாக மத்திய அரசில் புதிய துறையை 2019 ஆம் ஆண்டு உருவாக்கி, தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை ரூ 617 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் மத்சய சம்பதா திட்டம் இணைத்து இதுவரை 1356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,84,457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,42,458 மீனவர்கள், மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது மீனவர்கள் நலனுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்தது.
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தொகுதிக்காக எதுவும் சட்டசபையில் பேசாமல், டி.ஆர்.பாலு கப்பல் நிறுவனம் சம்பாதிக்க, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிறார். நாகை மாவட்டம் தொழில் வளர்ச்சி பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தனி நபர் வருமானத்தில் மற்ற மாவட்டங்களை விட நாகப்பட்டினம் மாவட்டத்தை கடைசி இடத்தில் வைத்திருக்கின்றனர். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கீழ்வேளுர் தொகுதி இருக்கிறது. 70 ஆண்டு கால தமிழக அரசியலில், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசி ஏழு இடங்களில் இருக்கிறது. திமுகவினாலும் கம்யூனிசத்தாலும் அழிந்த மாவட்டம் நாகப்பட்டினம் மட்டுமே.
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியில், பாரதம் உலக அரங்கில் உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில், உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் மதிப்பு உலகில் உயர்ந்திருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக மோடி அவர்கள் ஆட்சி தொடர வேண்டும். தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு முதற்படியாக, வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும். தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.