ராமரை வணங்குவதற்கு ஒருவர் ஹிந்துவாக பிறக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் நல்ல மனிதராக இருந்தாலே போதும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஷப்னம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்டமான முறையில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அயோத்தியை நோக்கி செல்லத்துவங்கியுள்ளனர்.
அதே போன்று மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த ஷப்னம் என்ற இளம் இஸ்லாமிய பெண் அயோத்திக்கு பாதயாத்திரை பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவருடன் தோழர்கள் ராமன் ராஜ் சர்மா மற்றும் வினீத் பாண்டே ஆகியோருடன் ஷப்னம் 1,425 கிலோ மீட்டர் தூரத்தை நடத்தே கடக்க புறப்பட்டுள்ளனர்.
தான் பிறப்பால் ஒரு இஸ்லாமியயர் என்ற போதும், தீவிரமான ஸ்ரீராமபக்தையாக தன்னை அடையாளம் படுத்திக்கொள்கிறார். பெரிதாக எந்த திட்டமிடலும் இல்லாது மும்பையிலிருந்து அயோத்தி நோக்கி பாதயாத்திரையாக கிளம்பிவிட்டார் ஷ்பனம்.
“சாதி மத வேறுபாடுகளை கடந்து, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்” என்று தெரிவித்த ஷப்னம், இதுபோன்ற கடினமான ஆன்மிக யாத்திரைகளை ஆண்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற கருத்தையும் உடைத்திருப்பதாக பெருமை கொள்கிறார்.
தினமும் 25 முதல் 30 கிமீ நடக்கும் இவர்கள் தற்போது, மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்தவாவை அடைந்துள்ளனர். மூவரும் சமூக ஊடகங்களின் பிரபலங்களாக மாறியதில், செல்லும் ஊர்களில் எல்லாம் பொதுமக்கள் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
மிக நீண்ட யாத்திரையால் களைப்பு ஏற்பட்டாலும் ராமர் மீதுள்ள பக்தி தங்களை தொடர்ந்து முன்னோக்கி செலுத்துவதாக மூவரும் தெரிவித்துள்ளனர். அதே போன்று அவர்கள் செல்லும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
ஷப்னத்தின் யாத்திரை சவால்கள் இல்லாமல் இல்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்வதில் மட்டுமின்றி, உணவு மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளிலும் காவல்துறை முக்கிய பங்காற்றியுள்ளது.
காவிக்கொடியை ஏந்தியபடி அவர் முன்னோக்கிச் செல்லும்போது, இஸ்லாமியர்கள் உட்பட பலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று வாழ்த்தியதன் மூலம் ஒற்றுமையின் இதயத் துடிப்பான தருணங்களை அனுபவித்ததாக ஷப்னம் கூறுகிறார்.
அயோத்திக்கு வருவதற்கு உறுதியான தேதி எதுவுமில்லை என்று ஷப்னம் தெளிவுபடுத்துகிறார், தனது பயணம் ஆன்மீக நிறைவுக்கான தனிப்பட்ட தேடலாகவும், மத எல்லைகளைத் தாண்டிய பக்தியின் உள்ளடக்கிய தன்மைக்கு சான்று எனக் கூறியுள்ளார்.
ஷப்னத்தின் பயணம் ஒற்றுமையின் அடையாளமாக நிற்கிறது, தடைகளை உடைத்து, அன்புக்கும் பக்திக்கும் எல்லையே இல்லை என்பதை அவரது ஆன்மிக பயணம் காட்டுகிறது.