இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியிடும் விழா, இன்று (டிசம்பர் 30) டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தபால் தலையை வெளியிட, இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் தொண்டைமான் பெற்றுக்கொண்டார்.
இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த நாட்டின் உள்கட்டமைப்புகளை நிறுவதில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் இன்று தபால் தலை வெளியிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
“இன்று நாம் 1883-ம் ஆண்டை நினைவு கூர்வதும், 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்ற தமிழர்களின் இந்திய வம்சாவளியை நினைவு கூர்வதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆங்கிலேயர்கள், இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு, தமிழர்களை அங்கு குடியேற ஊக்குவித்து, தங்கள் வயல்களில் வேலை செய்ய பணித்தனர். அந்த தமிழர்களின் போராட்டம் மிகவும் வேதனையானது. அந்த மக்கள் இலங்கைக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் அபாயங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்றார்.

மேலும், 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இலங்கைத் தமிழர்களுடன் ஈடுபாடு கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி என ஜே.பி.நட்டா பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வெளி நாட்டு விவகாரங்கள் துறை பொறுப்பாளர் விஜய் சௌதைவாலே, தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் தொண்டைமான் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அண்ணாமலை பேசியதாவது:
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் பங்கேற்றுள்ளோம். இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1823ல் முதன் முதலாக இலங்கைக்கு தோட்ட வேலை பார்ப்பதற்க்காக ஆங்கிலேயர்கள் கப்பல் மூலம் அழைத்து சென்றனர்
இதில் தமிழகத்தின் மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதன் முதலாக தனுஷ்கோடியில் இருந்து இலங்கை மன்னாருக்கு சென்றார்கள். அவர்கள் சென்று தற்போது 200 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நேரத்தில் 200 ஆண்டை குறிப்பிடும் வகையில் நமது பாரதிய ஜனதா கட்சியும், இலங்கை ஆளும் கூட்டணி கட்சியான சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரஸ் ஆகியோர் இணைந்து இன்று தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநருமான தொண்டைமான் பங்கேற்றார். அதே போன்று தமிழகத்தில் இருந்து நமது கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
முதன் முதலாக இலங்கை மலையகத் தமிழர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறுவது மிகுந்து மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் தபால் தலையை வெளியிட இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டைமான் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இலங்கையில் உள்ள நமது தமிழர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியும் எந்த அளவிற்கு அரணாக இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு ஆகும்.
1947க்கு பிறகு முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையின் மத்தியப் பகுதிக்கு சென்று தமிழ் சொந்தங்களை சந்தித்து உங்களோடு நாங்கள் இருக்கின்றோம் என்ற உறுதிமொழியை 2017ல் கொடுத்தார்.

முதல் கட்டமாக நான்காயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு இரண்டாம் கட்டமாக 10 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் இலங்கை தமிழர்களுக்காக பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவைகளை கட்டிக்கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாம் 200 என்ற நிகழ்ச்சியை அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டைமான் நடத்தினார். அதில் நமது இந்திய அரசாங்கம் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அதே போன்று தமிழகத்தில் இருந்து நிறைய சொந்தங்கள் சென்றிருந்தோம். இலங்கையில் வந்திருந்த குழு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே போன்று ஜே.பி.நட்டா அவர்கள் வெளியிட்ட தபால் தலையில் மலையகத் தமிழர்களின் உழைப்பை காடடும் வகையில் அமைந்துள்ளது என்ற படம் இடம் பெற்றுள்ளது. பெண் தொழிலாளர் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக தமிழர்களுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தொண்டைமான் பேசியதாவது:
இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்த உதவிக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்கிறோம். அங்கீகாரம் இல்லாமல் மலையகத் இலங்கை தமிழர்கள் இருந்தனர். அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறோம்.
இலங்கை மலையகத் தமிழர்களுக்காக இந்திய தபால்துறை சார்பில் கிடைத்துள்ள கவுரவம் மிகப்பெரியது. இதற்காக முயற்சி எடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவிற்கு மலையக தமிழ் மக்கள், இலங்கை தமிழ் மக்கள் மற்றும் எனது சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.
மலையக மக்களை பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அண்ணாமலை ஆகியோர் வந்துள்ளனர். எங்களுக்கு தற்போது அங்கீகாரம் கிடைக்கப்பெற உதவிய அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.