‘‘புதியதோர் உலகம் செய்வோம்’’ – பாரதிதாசன் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் முனையத்தின் திறப்பு விழா உள்ளிட்டவைகளில் பங்கேற்பதற்காகவும், புதிய திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 02) திருச்சிக்கு வருகை புரிந்தார்.

அப்போது முதல் நிகழ்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார். முதலில் பாரதிதாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின்னர் பட்டமளிப்பு நடைபெறும் அரங்கத்திற்குள் சென்றபோது பிரதமர் மோடிக்கு மாணவர்கள் கரகோஷங்களுடன் வரவேற்பு தெரிவித்தனர். பதிலுக்கு பிரதமர் மாணவர்களுக்கு கையசைத்தபடி சென்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். அதன் பின்னர் அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:

வணக்கம், எனது மாணவ குடும்பமே என பேசத் துவங்கினார். அப்போது மாணவ, மாணவிகள் பலத்த கைத்தட்டல்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேசிய பிரதமர், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த 2024ஆம் ஆண்டில் இது எனது முதல் பொது நிகழ்ச்சி.

மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நிகழ்வில் பட்டம் பெறும் மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவது என்பது ஒரு மிகப்பெரிய செயல்முறை. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கதையே வேறு. 1982இல் இது உருவாக்கப்பட்டபோது, பல கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வலுவான, மேம்பட்ட முறையில் உருவாக்கப்பட்டதாகும்.

நமது நாடும், கலாச்சாரமும் அறிவை மையமாகக் கொண்டது. நாளந்தா, தட்சஷீலா என்பவை பழங்காலத்தில் இயங்கிய புகழ்பெற்ற கல்வி நிலையங்கள். பண்டைய காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவையும் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. 20ஆம் நூற்றாண்டுகளில் காந்தி, பண்டித் மதன் மோகல் மாலவியா, சர்.அண்ணாமலை செட்டியார் ஆகியோர் பல்கலைக்கழகங்களைத் துவங்கினர். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. அதேபோல், கல்வியிலும் நமது பல்கலைக்கழகங்கள் உலகளவிலான தரவரிசையில் முக்கிய இடம் வகிக்கின்றன.

உங்கள் பல்கலைக்கழகத்தின் வாசகமான புகழ்பெற்ற பாரதிதாசன் தெரிவித்த, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்பதற்கேற்ப இளம் தலைமுறையினர் அத்தகைய நாட்டை உருவாக்கி வருகின்றனர். கொரோனா காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு, சந்திரயான் வெற்றி என அறிவியல், விளையாட்டுத்துறை என ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களின் சாதனை பெரியது. கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்த விவசாயிகளுக்கு கை கொடுக்க வேண்டும்.

கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு சகோதரத்துவம், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால், நமது நாடும் சிறந்து விளங்கும். கடைசி 10 ஆண்டுகளில் 74ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை, சுமார் 150 ஆக தற்போது உயர்ந்துள்ளது.

துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. சாலை வசதி கடைசி 10 வருடங்களில் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. பதிவு செய்யப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2014இல் 100ஆக இருந்த நிலையில், இன்று 1 லட்சமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவை உலக நாடுகள் புதிய நம்பிக்கையோடு பார்க்கிறது. இளம் தலைமுறையினர் நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பட்டம் பெறுவதுடன் கற்றல் முடிவதில்லை” ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என பிரதமர் மோடி தமிழில் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

எனது மாணவ குடும்பமே என பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறையும் சொல்லும்போது பலத்த கரகோஷத்துடன் மாணவர்கள் ஆர்ப்பரித்து கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை வேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top