கருணாநிதி குடும்ப வாரிசுகளின் நிலையையும் ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்கள் வாரிசுகளின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாமா? எனப் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓசூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஊழலுக்கு எதிராக தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” பாதயாத்திரை 150வது சட்டமன்றத் தொகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று (ஜனவரி 11) நடைப்பெற்றது. இந்த யாத்திரையில் பல ஆயிரக்கணக்காணோர் தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் பேசிய தலைவர் அண்ணாமலை,
ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் குடி கொண்டிருக்கும் ஓசூர் மலைக்கோயில், 800 ஆண்டுகள் பழமையானது. உலகில் எங்கும் காணக்கிடைக்காத சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மன் ஆகிய கோவில்கள் 3 மலைகளில் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.
ஓசூரில் உள்ள 300க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள், 3,000 சிறு குறு தொழிற்சாலைகளில் குண்டூசி முதல் விமானம் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசூர் மண் நேரடியாக சுமார் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறது. ஓசூரில் இருந்து மட்டும் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் அளவிற்கு ரோஜா ஏற்றுமதி நடைபெறுகிறது.
சென்னையில் 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று தி.மு.க. தொடங்கப்பட்டது. மறுநாள் செப்டம்பர் 18 அன்று, ராபின்ஸன் பூங்காவில் திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தின் அமைப்பாளர், தலைமை வகித்தவர் என இருவர் தவிர, அந்தக் கூட்டத்தில் பங்கேற்றதில் கடைசிப் பெயராக இருந்ததுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி பெயர்.
அண்ணாதுரை, ஈ.வி.கே.சம்பத், என்.வி.நடராஜன், வி.ஆர்.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் ஆகியவர்கள்தான் திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் என்று கூறப்பட்டவர்கள். பிறகு அமைக்கப்பட்ட நான்கு குழுக்களுக்கு, நெடுஞ்செழியனும், அமைப்புக் குழுவுக்கு நடராஜனும், சட்டத் திட்டக் குழுவுக்கு மதியழகனும், நிதிக்குழுவுக்கு காஞ்சி மணிமொழியாரும் தலைவர்கள் ஆனார்கள். ஆனால், கருணாநிதி அவர்களுக்கு எந்த தலைமை பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.
கடைசி வரிசையில் இருந்தவர் எப்படி திமுக தலைவர் ஆனார்? அன்றைய ஐம்பெரும் திராவிடத் தலைவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களது வாரிசுகளும், திராவிட வாரிசுகள்தானே? அவர்கள் எங்கே? திமுகவை ஆரம்பித்த அண்ணாதுரை அவர்களின் வளர்ப்பு மகன் பரிமளம், 2008 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வாரிசுகள் யாரும் அரசியலில் இல்லை.
ஐம்பெரும் தலைவர்களில் அடுத்தவரான மதியழகன் தன் தலைமைக்கு ஆபத்தானவர் என்று கருதிய கருணாநிதி, அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி விலக்கினார். அடுத்த தலைவரான நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆர். அவர்களுடன் சென்று விட்டார். கருணாநிதி குடும்ப வாரிசுகளின் நிலையையும் ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்கள் வாரிசுகளின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?
தகுதி உள்ள வாரிசுகள் அரசியலுக்கு வருவது தவறல்ல. வாரிசு என்பதாலேயே தகுதி வந்துவிடாது. தி.மு.க.வை தொடங்கிய ஐம்பெரும் தலைவர்கள் உள்பட 29 தலைவர்களின் வாரிசுகள் எங்கே என்றே உங்களுக்குத் தெரியாதது மட்டுமல்ல; அவர்களின் நிலை பற்றி நீங்கள் சிந்தித்தது கூட இல்லை. இப்போது தி.மு.க.வுக்கு இருக்கும் ஒரே வாரிசு உங்கள் குடும்ப வாரிசு உதயநிதிதான். இந்த நிலையில் தி.மு.க., அனைத்து திராவிட வாரிசுகளின் கட்சி என்று பேசுவது கேலிக்குரியது.
ஓசூர் தருமபுரி தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு, 1,331 கோடி ரூபாய் செலவிடுகிறது நமது மத்திய அரசு. தமிழகத்தில் மோடி அவர்கள் கொடுத்த 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கிருஷ்ணகிரியில் உள்ளது. பெங்களூரு கோவை இடையே இயக்கப்படும், ‘வந்தே பாரத்’ ரயில், ஓசூர் வழியாக செல்கிறது. 27,213 பேருக்கு பிரதமரின் வீடு, 2,20,188 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,45,579 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,10,425 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,08,623 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,54,588 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 4,403 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக ஓசூர் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றன.
ஓசூர் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள், ஓசூரில் உள்வட்டச் சாலை, ஓசூர் நகரில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கெலவரப்பள்ளி அணையிலிருந்து ராமநாயக்கன் ஏரிக்குத் தண்ணீர், ஓசூரில் ஆண் பணியாளர்களுக்கும், பெண் பணியாளர்களுக்கும் தங்குவதற்குத் தனித்தனியே விடுதிகள் என ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், நேர்மையான, ஊழலற்ற, மக்களுக்கான மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாரதப் பிரதமர் அவர்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.