ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தன்னால் முடிந்தவற்றை அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஒரு நெசவாளர் குடும்பம், சீதா தேவிக்கு வாழை நார் புடவை அனுப்ப உள்ளது.
சேகர் என்பவரின் குடும்பம் பாரம்பரியாக நெசவு தொழில் செய்து வருகின்ற குடும்பம். இவர்கள் குறிப்பாக வாழை நாரில் துணி நெய்யும் தொழிலை கடந்த 10 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறுவதை கேள்விப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு மிக்க நிகழ்விற்கு தங்களால் இயன்ற பரிசை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி சீதா தேவிக்கு ஹனுமன் அளித்த பிரத்யேக உடை குறித்து அறிந்து, அதை அடித்தளமாக வைத்து ஜனவரி 22ம் தேதியை சிறப்புக்குரிய வகையில் மாற்ற முடிவு செய்தனர். தங்களின் நெசவாளர்கள் குழு பெண்களிடம் பேசி வாழை நார் புடவையை சீதா தேவிக்கு தயாரித்து வழங்க திட்டமிட்டனர்.
முழுவதும் கைகளால் புடவையை நெய்ய வேண்டும். வாழை நார், சில்க், பருத்தி ஆகிய மூன்றையும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்காக 10 நாட்கள் தொடர்ந்து 10 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். ஃபைபர் மூலம் வேலைகள் நடந்ததால் சற்று அதிகமாக வேலைப்பளு இருந்துள்ளது.
ஆனாலும் சீதா தேவிக்கு காணிக்கையாக அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இடைவிடாமல் பணியாற்றியுள்ளனர். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் முழுவதும் பெண் ஊழியர்கள் மட்டுமே சேர்ந்து வாழை நார் புடவையை தயாரித்துள்ளனர். இந்த புடவையில் ராமர் கோவிலை தத்ரூபமாக கொண்டு வந்துள்ளனர்.
மேலும், ராமர் அம்பு விடும் வகையிலான படமும் இடம்பெற்றுள்ளது. காசுக்காக இந்த வேலையை செய்யவில்லை. தங்களின் உழைப்பு உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்ததாக தெரிவித்தனர். விரைவில் செங்கல்பட்டில் இருந்து அயோத்தி நகருக்கு வாழை நார் புடவையை சீதா தேவிக்கு அணிவிக்கும் வகையில் அனுப்பி வைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.