சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கருணாநிதி மகன், வீட்டில் வேலை பார்த்து வந்த பட்டியலின இளம் பெண்ணுக்கு, கொடுமை நடந்துள்ள சம்பவத்தில் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.